தெருவிளக்கு அமைத்ததாக போலி பில் மூலம் பணம் கையாடல்: முன்னாள் ஊராட்சி தலைவருக்கு 3 ஆண்டு ஜெயில்


தெருவிளக்கு அமைத்ததாக போலி பில் மூலம் பணம் கையாடல்: முன்னாள் ஊராட்சி தலைவருக்கு 3 ஆண்டு ஜெயில்
x
தினத்தந்தி 28 Nov 2019 10:15 PM GMT (Updated: 28 Nov 2019 9:09 PM GMT)

தெருவிளக்கு அமைத்ததாக போலி பில் மூலம் பணம் கையாடல் செய்த வழக்கில் முன்னாள் ஊராட்சி தலைவருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

நாகர்கோவில்,

சுசீந்திரம் வழுக்கம்பாறை பல்பநாபன்புதூர் பகுதியை சேர்ந்தவர் மோரீஸ் (வயது 61). இவர் கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை குலசேகரபுரம் ஊராட்சி தலைவராக இருந்தார். அந்த கால கட்டத்தில் ஊராட்சி பகுதிகளில் குடிநீர் தொட்டி மற்றும் தெரு விளக்குகள் அமைத்ததாக ேபாலி பில் தயாரித்து ரூ.60 ஆயிரம் கையாடல் செய்துள்ளார்.

இதுதொடர்பாக அப்போதைய அகஸ்தீஸ்வரம் வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்த பிரேமா என்பவருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து பிரேமா தலைமையில் அதிகாரிகள் குலசேகரபுரம் ஊராட்சியில் ஆய்வு செய்தனர். அப்போது மோரீஸ், போலி பில் தயாரித்து பணம் கையாடலில் ஈடுபட்டது தெரியவந்தது.

3 ஆண்டு ஜெயில்

இதுகுறித்து பிரேமா மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மோரீஸ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிறிஸ்டியன் நேற்று தீர்ப்பு கூறினார்.

தீர்ப்பில், குற்றம்சாட்டப்பட்ட மோரீசுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் யாசின் முபாரக் அலி ஆஜரானார். 

Next Story