கல்வராயன்மலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை: கோமுகி அணையின் நீர்மட்டம் 44 அடியாக உயர்வு
கல்வராயன்மலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாக கோமுகி அணையின் நீர்மட்டம் 44 அடியாக உயர்ந்தது. பெரியார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டி வருகிறது.
கச்சிராயப்பாளையம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே இயற்கை எழில் கொஞ்சும் கல்வராயன்மலை அடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. 46 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணைக்கு கல்வராயன்மலை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழைநீர் பொட்டியம், கல்படை, மல்லிகைப்பாடி ஆகிய ஆறுகளின் வழியாக வரும். அவ்வாறு வரும் மழைநீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையின் பாதுகாப்பு கருதி 44 அடி வரை சேமித்து வைத்து, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும். இதன் மூலம் பழைய மற்றும் புதிய பாசன வாய்க்கால் மூலம் 10 ஆயிரத்து 860 ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
கடந்த ஆண்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதாலும், கடந்த ஏப்ரல், மே மாதங்களில் ஏற்பட்ட வறட்சி காரணமாக கோமுகி அணை தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை காரணமாக கோமுகி அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 44 அடியை எட்டியது. அதன்பிறகு கடந்த 8-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை பாசனத்துக்காக பழைய பாசன வாய்க்காலில் வினாடிக்கு 60 கனஅடி நீரும், புதிய பாசன வாய்க்காலில் வினாடிக்கு 60 கனஅடி நீரும் திறந்து விடப்பட்டது. மேலும் தொடர்மழை காரணமாக அணையில் இருந்து பாசனத்துக்கு பழைய மற்றும் புதிய வாய்க்கால்கள் வழியாக வினாடிக்கு 220 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 44 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு 36 அடியாக குறைந்தது.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக கல்வராயன்மலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் பெரியார், மேகம், கவியம் உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளிலும், கரியாலூர் படகு குழாம் தடுப்பணையிலும் மழைநீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. கல்வராயன்மலையில் பெய்து வரும் தொடர் மழையால் பொட்டியம், கல்படை மற்றும் மல்லிகைப்பாடி ஆகிய ஆறுகளின் வழியாக கோமுகி அணைக்கு தண்ணீர் வந்தது. இதனால் 36 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து, நேற்று காலை 44 அடியை எட்டியது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கடல்போல் காட்சி அளிக்கிறது. நேற்று காலை 10 மணி நிலவரப்படி கோமுகி அணைக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் கோமுகி அணை நீரை நம்பி பயிர்களை சாகுபடி செய்த கோமுகி பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story