முகநூல் மூலம் மலர்ந்த காதல்: திருமணத்துக்கு மறுத்த வாலிபரை கொல்ல கூலிப்படையை ஏவிய மலேசியபெண் - 9 பேர் கைது


முகநூல் மூலம் மலர்ந்த காதல்: திருமணத்துக்கு மறுத்த வாலிபரை கொல்ல கூலிப்படையை ஏவிய மலேசியபெண் - 9 பேர் கைது
x
தினத்தந்தி 29 Nov 2019 11:30 PM GMT (Updated: 29 Nov 2019 7:08 PM GMT)

திருமணத்துக்கு மறுத்த முகநூல் காதலரை தீர்த்துக்கட்ட, மலேசிய பெண் அனுப்பிய கூலிப்படையினர் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

போடி,

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள காட்டுநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 28). இவர், பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு, முகநூல் மூலம் மலேசியாவை சேர்ந்த அமுதேஸ்வரி என்பவர் அறிமுகமானார். இவர்கள் 2 பேரும் முகநூல் மூலம் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அடிக்கடி செல்போனிலும் பேசி வந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. இவர்களுக்கிடையே பண பரிமாற்றமும் நடந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அசோக்குமாரை அமுதேஸ்வரி வற்புறுத்தியதாக தெரிகிறது. இது தொடர்பாக அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன்பிறகு 2 பேரும் உறவை துண்டித்து கொண்டனர்.

இந்தசூழ்நிலையில் மலேசியாவில் இருந்து கவிதா அருணாசலம் என்ற பெண், அசோக்குமாரின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அவர் தன்னை அமுதேஸ்வரியின் அக்காள் என்றும், திருமணம் செய்து கொள்ளாததால் அமுதேஸ்வரி தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறினார்.

இதனால் அசோக்குமார் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர் வேலை செய்த நிறுவனத்திலும் அந்த பெண் புகார் செய்தார். இதனையடுத்து அந்த நிறுவனத்தில் அசோக்குமாரை பணியில் இருந்து நிறுத்தி விட்டனர். இந்தநிலையில் மலேசியாவில் இருந்து கவிதா அருணாசலம் தேனி வந்தார்.

பின்னர் அசோக்குமாரை தொடர்பு கொண்டு நேரில் சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்தார். இதனையடுத்து கடந்த அக்டோபர் மாதம் 30-ந்தேதி தேனியில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த கவிதா அருணாசலத்தை அசோக்குமார் சந்தித்தார்.

அப்போது அவர் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும், இல்லையெனில் தற்கொலை செய்து கொள்வதாகவும் மிரட்டல் விடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அசோக்குமார், இதுகுறித்து தேனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

இதில் 45 வயதான அந்த பெண், அமுதேஸ்வரி, கவிதா அருணாசலம் என்ற பெயர்களில் அசோக்குமாரிடம் பேசியது உறுதி செய்யப்பட்டது. அந்த பெண்ணின் பாஸ்போர்ட்டை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் அவரது உண்மையான பெயர் விக்னே‌‌ஷ்வரி என்பது தெரியவந்தது. இதையடுத்து அசோக்குமாரை திருமணம் செய்வதற்காக மலேசியாவில் இருந்து விமானத்தில் தமிழகத்துக்கு வந்த விக்னே‌‌ஷ்வரியை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

பின்னர் விக்னே‌‌ஷ்வரி, அசோக்குமாரின் வீட்டுக்கு சென்றிருக்கிறார். அப்போது, தன்னை தகாத வார்த்தைகளால் அசோக்குமார் திட்டியதாக வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் விக்னே‌‌ஷ்வரி புகார் செய்தார். அதன்பேரில், அசோக்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றிய அசோக்குமாரை தீர்த்துக்கட்ட விக்னேஸ்வரி முடிவு செய்தார் இதனையடுத்து முகநூல் மூலம் கூலிப்படையை சேர்ந்த 9 பேரை தேர்வு செய்தார். அப்போது அவர்களிடம், தான் பணம் தருவதாகவும், அசோக்குமாரை தீர்த்துக்கட்ட வேண்டும் என்றும் அவரது போன் எண் மற்றும் புகைப்படங்களை அளித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து போடி அருகில் உள்ள தனியார் விடுதியில் கூலிப்படையினர் தங்கி இருந்தனர். அவர்களின் நடவடிக்கையில் விடுதி ஊழியர்கள் சந்தேகம் அடைந்து இது குறித்து போடி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அசோக்குமாரை கொலை செய்வதற்காக, அவரது நடவடிக்கைகளை மறைந்திருந்து கண்காணித்து வந்ததாக கூலிப்படையினர் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விடுதியில் தங்கியிருந்த கூலிப்படையை சேர்ந்த மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த அன்பரசன் (24), கமுதியை சேர்ந்த முனுசாமி(21), அய்யனார் (39), முருகன்(21), ராமேசுவரத்தை சேர்ந்த ஜோசப்(20), தேனி அல்லிநகரத்தை சேர்ந்த யோகே‌‌ஷ்(20), கார்த்திக் (21), தினே‌‌ஷ்(22), திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டியை சேர்ந்த பாஸ்கரன்(47) ஆகிய 9 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கார் மற்றும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனிடையே அசோக்குமாரை கொலை செய்ய திட்டம் தீட்டி கொடுத்த விக்னேஸ்வரி மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். முகநூல் மூலம் மலர்ந்த காதல் கொலை செய்யும் அளவுக்கு சென்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story