பெத்தேல்புரம்-பரப்பலாறு அணை இடையே, மலைப்பாதை அகலப்படுத்தும் பணி தொடக்கம்
வடகாடு அருகே பெத்தேல்புரம்-பரப்பலாறு அணை இடையிலான மலைப்பாதை அகலப்படுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
சத்திரப்பட்டி,
வடகாடு மலைப்பகுதிக்கு ஒட்டன்சத்திரத்தில் இருந்து மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஒட்டன்சத்திரத்தில் இருந்து வடகாடு, பாச்சலூர், கே.சி.பட்டி வழியாக வத்தலக்குண்டு, பெரியகுளம் மற்றும் கொடைக்கானல் ஆகிய ஊர்களுக்கு ஏராளமான அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அந்த வழியாக கல்லூரி மாணவர்கள், வடகாடு பகுதி விவசாயிகள் என ஏராளமானோர் சென்று வருகின்றனர். இந்தநிலையில் வடகாடு பகுதி வழியே செல்லும் மலைப்பாதையில் கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் எளிதாக சென்று வருகின்றன. ஆனால் பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் அந்த வழியே சென்று வருவதில் கடும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. எனவே மலைப்பாதையில் சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் மலைப்பாதையை அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி மலைப்பாதை அகலப்படுத்தும் பணிக்காக ரூ.8 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து முதற்கட்டமாக பெத்தேல்புரத்தில் இருந்து பரப்பலாறு அணை பகுதி வரை 8 கி.மீ. மலைப்பாதை அகலப்படுத்தப்படும் பணி நேற்று தொடங்கியது. இதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் சாலையோரத்தில் உள்ள புதர்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து 5 மீட்டர் அகலம் கொண்ட மலைப்பாதையானது, தற்போது 7 மீட்டராக அகலப்படுத்தப்பட உள்ளது. மேலும் சாலையோரங்களில் தடுப்புகள் அமைத்தல் ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்த பணிகள் மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ரமேஷ், உதவி கோட்ட பொறியாளர் பாலகிருஷ்ணன், உதவி பொறியாளர் ஜெயபாலன் ஆகியோர் மேற்பார்வையில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Related Tags :
Next Story