வேலூர் பெண்கள் ஜெயிலில் நளினி 2-வது நாளாக உண்ணாவிரதம் - விடுதலை செய்ய கோரிக்கை


வேலூர் பெண்கள் ஜெயிலில் நளினி 2-வது நாளாக உண்ணாவிரதம் - விடுதலை செய்ய கோரிக்கை
x
தினத்தந்தி 30 Nov 2019 4:30 AM IST (Updated: 30 Nov 2019 12:52 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் பெண்கள் ஜெயிலில் நளினி 2-வது நாளாக உண்ணாவிரதம் விடுதலை செய்ய கோரிக்கை விடுத்துள்ளார்.

வேலூர், 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 28 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வருகிறார்கள். கடந்த மாதம் முருகன் அறையில் செல்போன் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து, அவருக்கான சிறை சலுகைகள் ரத்து செய்யப்பட்டு அவர் தனி அறைக்கு மாற்றப்பட்டார்.

சிறை அதிகாரிகள் துன்புறுத்துவதாக கூறி முருகன் தொடர் உண்ணாவிரதம் இருந்தார். அவருக்கு ஆதரவாக நளினியும் உண்ணாவிரதம் மேற்கொண்டார். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின்னர் இருவரும் உண்ணாவிரதத்தை கைவிட்டனர். அதைத்தொடர்ந்து இருவரும் சந்தித்து பேச அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நளினியை, அவருடைய தாய் பத்மா வேலூர் பெண்கள் ஜெயிலில் சந்தித்து பேசினார். அப்போது நளினி 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாழ்க்கையை கழித்துவிட்டதாலும், பல ஆண்டுகள் போராடியும் விடுதலை கிடைக்கவில்லை என்பதாலும் வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் தன்னை கருணைக்கொலை செய்யக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளதாகவும் தாயாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னை விடுதலை செய்யக்கோரி நேற்று முன்தினம் முதல் மீண்டும் தொடர் உண்ணாவிரதத்தையும் மேற்கொண்டுள்ளார். அதிகாரிகள் சமரசம் செய்தும், அதை ஏற்கமறுத்து நேற்று 2-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.

Next Story