கிரிவீதிகளில் ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு: பழனி முருகன் கோவிலுக்கு பட்டாலியன் போலீஸ் பாதுகாப்பு
பழனி முருகன் கோவிலுக்கு என தனி பட்டாலியன் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது என்று திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பழனி,
திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் நேற்று பழனி முருகன் கோவிலுக்கு வருகை தந்தார். பின்னர், பழனி கிரிவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு செய்தார். அப்போது அங்கு ஆக்கிரமித்து கடை வைத்திருந்தவர்கள் தங்களுக்கு வியாபாரம் செய்ய தனியாக கோவில் மற்றும் நகராட்சி சார்பில் இடம் ஒதுக்க வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை விடுத்தனர்.
பின்னர் அவர் கிரிவீதிகளில் உள்ள வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் சோதனை சாவடி மையங்களுக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்று வாகனங்களில் வந்த பக்தர்களிடம் விசாரித்தார். தொடர்ந்து அவர் கிரிவீதிகளில் உள்ள அலங்கார விற்பனை கடைகள், உணவு கடைகளில் ஆய்வு செய்தார்.
பின்னர் கோவில் தண்டபாணி நிலையத்தில் அதிகாரிகளுடன் ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தினார். இதில் நகராட்சி ஆணையாளர் லட்சுமணன், தாசில்தார் பழனிசாமி, கோவில் துணை ஆணையர் செந்தில்குமார், பழனி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் கோவிலின் நலன் கருதி பட்டாலியன் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. பக்தர்களுக்கு சுகாதாரமான முறையில் உணவு விற்பனை செய்யப்படுகிறதா என அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். கிரிவீதிகளில் நடைபாதைகளை ஆக்கிரமித்து வியாபாரம் செய்பவர்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு அவர்களுக்கு வியாபாரம் செய்ய தனியாக இடம் ஒதுக்க வேண்டும். கோவில் கடைகள் உள்வாடகைக்கு விடுவதை தடுக்க கடைகளின் முன்புறம் வாடகைதாரரின் பெயர், ஆதார் கார்டு எண், கடையில் பணிபுரியும் ஊழியர் விவரம் போன்றவை புகைப்படத்துடன் ஒட்டிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. கும்பாபிஷேக பணிகளில் நன்கொடை வசூலிப்பதில் குளறுபடிகளை தடுக்க வெளிப்படை தன்மையை கடைபிடிக்க அறநிலையத்துறை ஆணையரிடம் வலியுறுத்தப்பட உள்ளது. பழனியில் பூட்டி வைக்கப்பட்டிருக்கும் கழிப்பறைகளை திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story