ஒட்டன்சத்திரம் தாலுகாவில், மக்காச்சோள பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகள் - விவசாயிகள் வேதனை
ஒட்டன்சத்திரம் தாலுகாவில் தோட்டத்திற்குள் புகுந்து மக்காச்சோள பயிர்களை காட்டுப்பன்றிகள் நாசம் செய்து வருகின்றன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
சத்திரப்பட்டி,
ஒட்டன்சத்திரம் தாலுகாவில் சத்திரப்பட்டி, வேலூர்-அன்னப்பட்டி, ரெட்டியபட்டி, வீரலப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோள பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையை அடுத்து விவசாயிகள் மானாவாரி முறையில் இந்த மக்காச்சோள பயிர்களை சாகுபடி செய்தனர்.
விதைத்து 50 நாட்கள் ஆன நிலையில் தற்போது அவை நன்கு விளைந்து, விரைவில் கதிர் வரும் பருவத்தில் உள்ளன. இந்தநிலையில் அருகில் உள்ள மலைப்பகுதியில் இருந்து இரவு நேரத்தில் விளை நிலங்களுக்குள் காட்டுப்பன்றிகள் அவ்வப்போது புகுந்து விடுகின்றன. அவ்வாறு புகும் காட்டுப்பன்றிகள் அங்குள்ள மக்காச்சோள பயிர்களை நாசம் செய்துவிட்டு செல்கின்றன.
இரவு நேரங்கள் மட்டுமின்றி பகல் வேளைகளிலும் கூட்டமாக வரும் அவை மக்காச்சோள செடி மற்றும் கதிர்களை தின்றுவிட்டு செல்கின்றன. ஏற்கனவே போதிய அளவு மழை இல்லாததால் மக்காச்சோள பயிர்களை காக்க பல்வேறு போராட்டங்களை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். இதற்கிடையே காட்டுப்பன்றிகள் அட்டகாசத்தால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
அதோடு உரம், களையெடுப்பு உள்ளிட்டவற்றுக்கும், மேற்கொண்ட விவசாயத்திற்கும் செலவு செய்த தொகையை எடுக்க முடியுமா என்ற நிலையில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம் செய்வதால் பெரும் நஷ்டம் ஏற்படும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். எனவே வனத்துறை அதிகாரிகள் காட்டுப்பன்றிகளின் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story