விடிய விடிய கொட்டி தீர்த்த மழை, உப்பளம் விளையாட்டு மைதான சுற்றுச்சுவர் இடிந்தது


விடிய விடிய கொட்டி தீர்த்த மழை, உப்பளம் விளையாட்டு மைதான சுற்றுச்சுவர் இடிந்தது
x
தினத்தந்தி 30 Nov 2019 3:30 AM IST (Updated: 30 Nov 2019 4:02 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் விடிய விடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது. அதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. மழையில் நனைந்த உப்பளம் விளையாட்டு மைதானத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

புதுச்சேரி, 

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் புதுவையில் கடந்த ஒரு வாரமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நள்ளிரவில் தொடங்கி மழை விடிய, விடிய பெய்கிறது. இதனால் பாகூர், வில்லியனூர் உள்ளிட்ட பல ஊர்களில் ஏரிகள் நிரம்பின.

பாகூர் கொம்யூன் பஞ்சாயத்தில் 24 ஏரிகள் உள்ளன. இதில் கிருமாம்பாக்கம், குருவிநத்தம், அரங்கனூர், பனையடிக்குப்பம், பாகூர் சித்தேரி, பரிக்கல்பட்டு, மணப்பட்டு உள்பட 10 ஏரிகள் நிரம்பி வழிந்தன. பல இடங்களில் வாய்க்கால்களில் மறுகால் பாய்ந்தது. புதுவை மாநிலத்தின் 2-வது பெரிய ஏரியான பாகூர் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. ஊசுட்டேரியிலும் தண்ணீர் நிரம்பி வருகிறது.

தொடர்ந்து பெய்து வரும் மழையால் புதுவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சாலைகள் சேதமடைந்து வாகன போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறிவிட்டன. இந்த சாலைகளின் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள்.

கடந்த 4 நாட்களாக நள்ளிரவில் மழை பெய்ய தொடங்குகிறது. தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருவதால் காலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். நேற்று முன் தினம் நள்ளிரவு 1 மணியளவில் பெய்த மழை விடிய விடிய பெய்தபடி இருந்தது. காலையிலும் மழை நீடித்தது. பகல் முழுவதும் மழை பெய்யாவிட்டாலும் வெயில் முகம் காட்டாமல் மேகமூட்டமாக இருந்தது. இதனால் குளிர்ச்சியாக இருந்தது.

தொடர்ந்து பெய்த மழை காரணமாக நகரில் தாழ்வான பகுதிகளில் மழை தண்ணீர் தேங்கியது. புஸ்சி வீதி, காமராஜர் சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகளிலும் தண்ணீர் தேங்கியது. குமரகுரு பள்ளம் மற்றும் மீனவ கிராமங்களில் குடிசை வீடுகளில் தண்ணீர் புகுந்தது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

மழையில் நனைந்து சேதமடைந்த புதுவை உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தின் சுற்றுச்சுவர் சுமார் 10 மீட்டர் நீளத்துக்கு இடிந்து விழுந்தது. மற்ற பகுதியும் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் உள்ளது.

மேலும் மைதானத்துக்குள் மழை நீர் வடிந்து செல்ல வழி இல்லாததால் ஆங்காங்கே மழை தண்ணீர் குளம்போல் தேங்கி உள்ளது. இவற்றில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. அதோடு மைதானத்துக்கு நாள்தோறும் நடை பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சிகளுக்கு வருவோர் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர்.

வில்லியனூர் பகுதியிலும் விடிய விடிய மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதியில் மழை தண்ணீர் தேங்கி நின்றன. வில்லியனூர் கண்ணகி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள வேப்பமரத்தின் கிளை நேற்று மதியம் உணவு இடைவேளை நேரத்தில் திடீரென்று முறிந்து விழுந்தது. அப்போது அதன் அடியில் நின்ற மாணவிகள் மீது மரக்கிளை அமுக்கியது.

இந்த சம்பவத்தில் மாணவிகள் சங்கீதா, வரலட்சுமி, சந்தியா, பவித்ரா, சாமூண்டீஸ்வரி, முர்ஷிதாபேகம் ஆகிய 6 மாணவிகள் லேசான காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்கு பின் அவர்கள் வீடு திரும்பினர். இந்த சம்பவத்தால் பள்ளியில் பதற்றம் ஏற்பட்டது.

Next Story