மராட்டிய சட்டசபையில் உத்தவ் தாக்கரே அரசு இன்று பலப்பரீட்சை
கவர்னரின் உத்தரவை ஏற்று உத்தவ் தாக்கரே அரசு சட்டசபையில் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது. சபையை நடத்துவதற்கு வசதியாக தற்காலிக சபாநாயகராக திலீப் வல்சே பாட்டீல் நியமிக்கப்பட்டு உள்ளார்.
மும்பை,
மராட்டிய சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா, சிவசேனா இடையே முதல்-மந்திரி பதவியை பங்கிடும் பிரச்சினையில் மோதல் வெடித்ததால் அந்த கட்சிகளால் ஆட்சி அமைக்க முடியவில்லை.
பின்னர் அடுத்தடுத்து நடந்த அரசியல் குழப்பங்களால் கடந்த 12-ந் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி அதிகாலை திடீரென ஜனாதிபதி ஆட்சி விலக்கி கொள்ளப்பட்டது. தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவாரை தன்பக்கம் இழுத்து அன்று காலை வேளையில் பாரதீய ஜனதா திடீர் ஆட்சி அமைத்தது. முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிசும், துணை முதல்-மந்திரியாக அஜித்பவாரும் பதவி ஏற்றனர். பின்னர் நடந்த எதிர்பாராத திருப்பமாக அஜித்பவார் பதவியை ராஜினாமா செய்து விட்டு கட்சிக்கு திரும்பியதால், பதவி ஏற்ற 4 நாட்களிலேயே தேவேந்திர பட்னாவிஸ் அரசு கவிழ்ந்தது.
இதையடுத்து, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் ‘மகா விகாஷ் முன்னணி’ என்ற தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி ஆட்சியை பிடித்தது. இந்த அரசின் முதல்-மந்திரியாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் பதவி ஏற்றார். அவருடன் 3 கட்சிகளை சேர்ந்த 6 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர்.
கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி வருகிற 3-ந் தேதிக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரே அரசுக்கு உத்தரவிட்டு உள்ளார். அதன்படி மெஜாரிட்டியை நிரூபிக்க இன்னும் கால அவகாசம் இருந்தாலும், உடனடியாக சட்டசபையில் பலப்பரீட்சை நடத்த முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே முடிவு செய்தார். இதனால் பதவி ஏற்ற அன்றே இரவில் மந்திரி சபையை கூட்டிய போது மெஜாரிட்டியை நிரூபிப்பது குறித்து அவர் தீவிர ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் சட்டசபை இன்று (சனிக்கிழமை) கூடுவதாகவும், இதில் பிற்பகல் வேளையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தனது அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோர இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
288 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் அரசு வெற்றி பெற 145 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற நிலையில், சிவசேனா தலைமையிலான கூட்டணி தங்களிடம் 166 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக கூறி உள்ளது. 105 உறுப்பினர்களை கொண்ட பாரதீய ஜனதா, சுயேச்சைகளுடன் சேர்த்து 119 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக ஏற்கனவே கூறி இருந்தது.
உத்தவ் தாக்கரே அரசை தோற்கடிக்க பாரதீய ஜனதாவிடம் போதிய பலம் இல்லாததால், அந்த அரசு வெற்றி பெறுவதில் எந்த சிக்கலும் இருக்காது என்று கருதப்படுகிறது.
இந்த நிலையில் அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்த்து வாக்களிப்பதா? அல்லது வெளிநடப்பு செய்வதா? என்று பாரதீய ஜனதா ஆலோசனை நடத்தி வருகிறது.
இதற்கிடையே இன்று சட்டசபையை நடத்தும் வகையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திலீப் வல்சே பாட்டீல் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.
7-வது முறையாக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற திலீப் வல்சே பாட்டீல் தற்போது அம்பேகாவ் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். இவர் ஏற்கனவே சபாநாயகர் பதவி வகித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story