3-வது நாளாக உண்ணாவிரதம்: கருணைக்கொலை செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டில், நளினி மனு சிறையில் சந்தித்து பேசிய வக்கீல் தகவல்
தன்னையும், கணவரையும் கருணைக்கொலை செய்யுமாறு நளினி சுப்ரீம் கோர்ட்டில் மனு அளித்துள்ளார். மேலும், விடுதலை செய்யக்கோரி ஜெயிலில் 3-வது நாளாக உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார்.
வேலூர்,
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இருவரும் 28 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வருகிறார்கள். இந்த நிலையில் நளினி கடந்த 27-ந் தேதி ஜெயில் அதிகாரிகளிடம் மனு அளித்தார்.
அதில், பல ஆண்டுகளாக ஜெயில் தண்டனை அனுபவித்து வரும் தங்களை விடுதலை செய்ய வேண்டும் அல்லது கருணைக்கொலை செய்ய வேண்டும் என கூறி உண்ணாவிரதம் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து அவர் கடந்த 28-ந் தேதி காலை முதல் உண்ணாவிரதம் இருந்தார். நேற்று 3-வது நாளாக நளினி உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.
இந்த நிலையில் நளினியின் வக்கீல் புகழேந்தி நேற்று மதியம் வேலூர் பெண்கள் ஜெயிலில் நளினியையும், தொடர்ந்து ஆண்கள் ஜெயிலில் முருகனையும் சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நளினி கடந்த 27-ந் தேதி பிரதமருக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில், அவரையும், முருகனையும் கருணைக்கொலை செய்யும்படி கோரிக்கை வைத்துள்ளார். 28 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகிறோம். முன்பு எங்களுக்கு விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் தற்போது அந்த நம்பிக்கை போய்விட்டது. சிறை அதிகாரிகள் எனது கணவரை துன்புறுத்துகிறார்கள். இதை என்னால் பார்த்து கொண்டிருக்க முடியவில்லை. எனது கணவருக்கு ஜெயிலில் வழக்கமாக அனுமதிக்கக்கூடிய சலுகைகளை கூட தற்போது அனுமதிக்க மறுக்கின்றனர். எனவே எங்களை கருணைக்கொலை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதைத்தவிர நளினி நேற்று தங்களை கருணைக்கொலை செய்யுமாறு சிறைத்துறை நிர்வாகம் மூலம் சுப்ரீம் கோர்ட்டில் மனு அளித்துள்ளார். மேலும் அவர் தமிழக உள்துறை செயலாளருக்கும் மனு அனுப்பி உள்ளார். அதில், ஜெயிலில் தங்களை துன்புறுத்துகிறார்கள். என்னையும், எனது கணவரையும் சென்னை புழல் ஜெயிலுக்கு மாற்ற சிறை அதிகாரிகள் மறுக்கிறார்கள். சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டும் கூட ஜெயில் அதிகாரிகள் அதை கடைப்பிடிக்கவில்லை. எங்களை வேறு சிறைக்கு மாற்ற கோரிக்கை விடுத்தோம். ஆனால் அதையும் நிராகரித்து விட்டனர். எனவே எங்களை கர்நாடக ஜெயிலுக்கோ அல்லது வேறு மாநிலத்துக்கோ மாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கருணைக்கொலை செய்யக்கோரி முருகனும் ஜெயிலில் 3-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதுதொடர்பாக அவர் சிறைத்துறை நிர்வாகத்துக்கு மனு அளிக்கவில்லை. ஜெயிலில் முருகன் துன்புறுத்தப்படுவதற்கு சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி தான் காரணம். ஜெயிலுக்குள் ஊழல்கள் நடக்கிறது. அதில் டி.ஐ.ஜி. லாபம் அடைவதாக முருகன் தமிழக அரசுக்கு ஒரு மனு அனுப்பியிருந்தார். அதன் காரணமாக முருகனை துன்புறுத்துகிறார்கள். டி.ஐ.ஜி. ஜெயபாரதி மீதான புகார்களை சேகரித்து வருகிறோம். விரைவில் டி.ஐ.ஜி. மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story