தஞ்சை மாவட்டத்தில் மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின கதிர்வந்த நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை


தஞ்சை மாவட்டத்தில் மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின கதிர்வந்த நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 1 Dec 2019 4:15 AM IST (Updated: 1 Dec 2019 1:10 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி காணப்பட்டன. கதிர்வந்த நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் வடகிழக்குப்பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய போது 1 வாரம் தொடர்ந்து மழை பெய்தது. அதன் பின்னர் அவ்வப்போது மழைபெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெப்பசலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் பல பகுதிகளில் பலத்த மழையும் பெய்துள்ளது.

நெற்பயிர்கள் நீரில் மூழ்கின

தஞ்சை மாவட்டத்தில் தற்போது விவசாயிகள் சம்பா, தாளடி சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சத்து 25 ஆயிரம் எக்டேர் வரை சம்பா, தாளடி நடவுப்பணிகள் முடிவடைந்துள்ளன. இன்னும் கடைமடை பகுதியான பேராவூரணி, மதுக்கூர், அதிராம்பட்டினம் பகுதிகளிலும், உய்யகொண்டான் வாய்க்கால் பாசன பகுதியான பூதலூர், திருக்காட்டுப்பள்ளி பகுதிகளிலும் நடவுப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் இளம் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி காணப்படுகின்றன. தஞ்சை- மன்னார்குடி சாலையில் உள்ள காட்டூர், துறையுண்டார்கோட்டை பகுதிகளில் இளம் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி காணப்படுகின்றன. இதே போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை நடவுசெய்யப்பட்ட இளம் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி காணப்படுகின்றன.

விவசாயிகள் கவலை

வளர்ந்த நெற்பயிர்களிலும் அதிக அளவு தண்ணீர் தேங்கி காணப்பட்டன. தஞ்சை கீழவஸ்தாசாவடி உள்ளிட்ட இடங்களில் நெற்பயிர்கள் சாய்ந்து காணப்பட்டன. பல இடங்களில் கதிர் வந்த நிலையில் உள்ள முன்கூட்டிய சம்பா நெற்பயிர்கள் மழையினால் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள வல்லம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மற்றும் சூரக்கோட்டை பகுதிகளில் பெய்யும் மழைநீர் வல்லம் வடிகால் வாரி வழியாக வந்து ஆற்றில் கலக்கும். ஆனால் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வல்லம் வாரி வடிகாலில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பல பகுதிகளில் பொங்கல் கரும்புகளும் சாய்ந்த நிலையில் காணப்பட்டன.


Next Story