உடுமலை மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் வட்டார போக்குவரத்து அலுவலகமாக தரம் உயர்த்தப்படும் - அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேச்சு


உடுமலை மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் வட்டார போக்குவரத்து அலுவலகமாக தரம் உயர்த்தப்படும் - அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேச்சு
x
தினத்தந்தி 30 Nov 2019 11:15 PM GMT (Updated: 30 Nov 2019 11:05 PM GMT)

உடுமலை மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் வட்டார போக்குவரத்து அலுவலகமாக தரம் உயர்த்தப்படும் என்று ஓட்டுனர் தேர்வு தளம் திறப்பு விழாவில் அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசினார்.

உடுமலை,

உடுமலை எலையமுத்தூர் சாலையில் வட்டார போக்குவரத்துத் துறையின் உடுமலை மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு பழகுனர் ஓட்டுனர் உரிமம்,புதியதாக ஓட்டுனர் உரிமம் பெறுதல், ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல்,புதியதாக வாகனங்களை பதிவு செய்தல் ,தகுதி சான்றிதழ் பெறுதல் உள்ளிட்ட பணிகளுக்காக தினசரி சுமார் 200 பேர்வரை வந்து செல்கின்றனர்.

இங்கு ஓட்டுனர் உரிமத்திற்காக வருகிறவர்கள் வாகனத்தை ஓட்டி காட்ட வேண்டும். குறிப்பாக இருசக்கர வாகனத்திற்கு ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு அதிகம் பேர் வருகின்றனர். அவர்கள் இருசக்கர வாகனத்தை 8 வடிவில் ஓட்டி காட்ட வேண்டும். அதேபோன்று நான்கு சக்கர வாகன ஓட்டுனர் உரிமம் பெறவும் அந்த வாகனத்தை ஓட்டி காட்ட வேண்டும். அதற்காக இந்த மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக வளாகத்தில் 4 சக்கர வாகனம் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை ஓட்டிக்காட்டுவதற்கு ஓட்டுனர் தேர்வு தளம்(நவீன சோதனை ஓடுதளம்) அமைக்கப்பட்டுள்ளது.

இதில் இருசக்கர வாகன ஓட்டுனர்கள் 8 போட்டு காட்டும் வகையிலும், நான்கு சக்கர வாகன ஓட்டுனர்கள் நான்கு சக்கர வாகனங்களை " எச்" என்ற ஆங்கில எழுத்து வடிவிலும் வாகனத்தை இயக்கி காட்ட வேண்டும். இந்த அலுவலக வளாகத்தை சுற்றி சுற்றுச்சுவரும் கட்டப்பட்டுள்ளது. இந்த பணிகள் மொத்தம் ரூ.72 லட்சத்து 74 ஆயிரம் செலவில் மேற்கொள்ளப்பட்டது.

இந்த பணிகளை பொதுப்பணித்துறையினர் முடித்து கடந்த ஏப்ரல் மாதம் வட்டார போக்குவரத்துத் துறையிடம் ஒப்படைத்தனர். இந்த ஓட்டுனர் தேர்வு தளம்(நவீன சோதனை ஓடுதளம்) திறப்புவிழா நேற்று நடந்தது. விழாவிற்கு கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்து பேசியதாவது:-

தற்போது இந்த மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் தாராபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் வாகனப் பதிவுகள் அதிகம்நடக்கின்றன. உடுமலை பகுதியில் இருந்து கேரளா பகுதிகளுக்கு வாகனங்களில் செல்கிறவர்கள்‌ தற்காலிக அனுமதி(டெம்ரவரி பர்மிட்) பெறுவதற்காக தாராபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு செல்ல வேண்டியுள்ளது‌. அதனால் விரைவில் உடுமலை மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் தனி வட்டார போக்குவரத்து அலுவலகமாக தரம் உயர்த்தப்படும். அதன்பிறகு தற்காலிக அனுமதியை உடுமலையிலேயே பெற்றுக்கொள்ளலாம் இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சருடன் பேசியுள்ளேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.சுகுமார் முன்னிலை வகித்தார்.கோவை மண்டல போக்குவரத்து இணை ஆணையர் எம்.ஜெயசங்கரன் வரவேற்று பேசினார். விழாவில் உடுமலை ஆர்.டி.ஓ.இந்திரவள்ளி, தாராபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். உடுமலை மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வதீபா நன்றி கூறினார்.

Next Story