சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகளை எடுத்து வரும் பக்தர்களுக்கு தங்கம், வெள்ளி நாணயம் பரிசு - கலெக்டர் தகவல்


சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகளை எடுத்து வரும் பக்தர்களுக்கு தங்கம், வெள்ளி நாணயம் பரிசு - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 1 Dec 2019 10:30 PM GMT (Updated: 1 Dec 2019 3:23 PM GMT)

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கார்த்திகை தீபத்திருவிழாவின் போது சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகளை எடுத்து வரும் பக்தர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது என்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. கார்த்திகை தீபத்திருவிழாவின் போது பொதுமக்கள் துணிப்பை, சணல் பை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பிற தூக்கு பைகளை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் தூக்கு பைகளை எடுத்து வரும் பொதுமக்களுக்கு குலுக்கல் முறையில் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் வழங்கும் திட்டம் கடந்த 2013-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு பிளாஸ்டிக் தூக்கு பைகளுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த துணி மற்றும் சணல் பைகளை எடுத்து வரும் பக்தர்களை ஊக்குவிக்கும் வகையில் 12 பேருக்கு தலா 2 கிராம் தங்கம் மற்றும் 72 பேருக்கு தலா 10 கிராம் வெள்ளி நாணயங்கள் வழங்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது. மேலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகளை கொண்டு வந்து கூப்பன் பெறும் ஒவ்வொரு நபருக்கும் ஒரு துணிப்பை வழங்கப்பட இருக்கிறது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகளை கொண்டு வரும் பக்தர்களுக்கு கூப்பன்களை வழங்குவதற்காக குபேர லிங்கம், அண்ணா நுழைவு வாயில் மற்றும் பெரியார் சிலை அருகில் அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. 3 இடங்களிலும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் வழங்கப்படும் கூப்பன்களை சேர்த்து கணினியில் குலுக்கல் முறையில் 3 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு 10 கிராம் வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது.

மேலும் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வழங்கப்படும் கூப்பன்களை சேர்த்து கணினியில் குலுக்கல் முறையில் ஒரு சிறப்பு நபர் தேர்வு செய்யப்பட்டு 2 கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட உள்ளது.

இந்த திட்டம் 24 மணி நேரம் அதாவது வருகிற 9-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 6 மணி முதல் மறுநாள் 10-ந் தேதி மாலை 6 மணி வரை செயல்படுத்தபட உள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தீபத்திருவிழாவிற்கு வரும் பொதுமக்கள், தங்களது துணிப்பை, சணல் பை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தூக்கு பையுடன் வருகை புரிந்து இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story