‘திடீர்’ வெள்ளப்பெருக்கு: கொள்ளிடம் ஆற்றில் சிக்கிய தொழிலாளர்கள் 2 பேர் மீட்பு


‘திடீர்’ வெள்ளப்பெருக்கு: கொள்ளிடம் ஆற்றில் சிக்கிய தொழிலாளர்கள் 2 பேர் மீட்பு
x
தினத்தந்தி 1 Dec 2019 11:00 PM GMT (Updated: 1 Dec 2019 5:51 PM GMT)

திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கொள்ளிடம் ஆற்றில் சிக்கி கொண்ட தொழிலாளர்கள் 2 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

கபிஸ்தலம்,

அரியலூர் மாவட்டம் டி.பழூர் அருள்மொழி கிராமம் மேல தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் முரளி (வயது26). திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (45). மாடு மேய்க்கும் தொழிலாளர்கள். இவர்கள் உள்பட 4 பேர் நேற்று முன்தினம் இரவு தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே குடிதாங்கி கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆறு வழியாக 150-க்கும் மேற்பட்ட மாடுகளை ஓட்டிக்கொண்டு அரியலூர் மாவட்ட பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது ஆற்றில் தண்ணீரின் அளவு குறைவாக இருந்தது. இரவு நேரம் என்பதால் 4 பேரும் மாடுகளுடன் கொள்ளிடம் ஆற்றின் நடுவில் உள்ள மணல் திட்டில் சற்று நேரம் அமர்ந்திருந்தனர். இதனிடையே கனமழை காரணமாக கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாயில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு திறந்து விடப்பட்டது.

திடீர் வெள்ளப்பெருக்கு

இதன் காரணமாக குடிதாங்கி பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் மாடுகள் அனைத்தும் ஆற்றை கடந்து அரியலூர் மாவட்ட பகுதிக்கு சென்று விட்டன. முரளி, பாண்டியன் ஆகியோருடன் வந்த மற்ற 2 பேரும் மாடுகளுடன் கரையேறி விட்டனர். ஆனால் முரளி, பாண்டியன் ஆகிய 2 பேர் மட்டும் ஆற்றின் நடுவே உள்ள மணல் மேட்டில் சிக்கிக்கொண்டனர். வெள்ளம் அதிகமாக இருந்ததால் இருவரும் ஆற்றை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று மதியம் ஆற்றங்கரையில் இருந்த சிலர் 2 பேர் ஆற்றின் நடுவே உள்ள மணல் திட்டில் சிக்கிக்கொண்டு இருப்பதை கவனித்து கும்பகோணம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கும்பகோணம் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசாரின் உதவியுடன் சிறிய படகு மூலமாக முரளி, பாண்டியன் ஆகிய 2 பேரையும் பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.

கலெக்டர் அறிவுறுத்தல்

கொள்ளிடம் ஆற்றில் 2 பேர் சிக்கிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்வதால் யாரும் ஆற்றில் இறங்க கூடாது என தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் அறிவுறுத்தி உள்ளார்.

Next Story