பண்ணந்தூரில் சின்ன ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்வது குறித்த ஆலோசனை கூட்டம்: கலெக்டர் பிரபாகர் பங்கேற்பு


பண்ணந்தூரில் சின்ன ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்வது குறித்த ஆலோசனை கூட்டம்: கலெக்டர் பிரபாகர் பங்கேற்பு
x
தினத்தந்தி 1 Dec 2019 10:00 PM GMT (Updated: 1 Dec 2019 6:09 PM GMT)

பண்ணந்தூர் ஊராட்சி சின்ன ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்வது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் பிரபாகர் கலந்து கொண்டார்.

காவேரிப்பட்டணம்,

பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பண்ணந்தூர் ஊராட்சியில் பெரிய ஏரியில் இருந்து சின்ன ஏரிக்கு தண்ணீர் நிரப்புவதற்கான பணிகளை மாவட்ட கலெக்டர் பிரபாகர் மற்றும் சி.வி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து பெரிய ஏரியில் இருந்து சின்ன ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்த ஆலோசனை கூட்டம் பண்ணந்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்து கொண்டு கலெக்டர் பேசியதாவது:- பெரிய ஏரியில் வடியும் உபரி நீரை சின்ன ஏரிக்கு கொண்டு செல்லும் வகையில் பண்ணந்தூர் வேளாண்மை சங்கம் சார்பாக கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிணற்றிலிருந்து 25 எச்.பி. மின் மோட்டார் மூலம் தண்ணீர் பைப் லைன் மூலமாக உயர் மட்ட தொட்டிக்கு நீரேற்றம் செய்து அவற்றிலிருந்து சின்ன ஏரிக்கும் தண்ணீர் கொண்டு செல்ல வேளாண்மை சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பாக கோரிக்கை விடுத்திருந்தார்கள்.

மின் மோட்டார் பயன்படுத்துவதன் மூலமாக ஊராட்சிக்கு அதிகமான மின்கட்டணம் ஏற்படுவதை கருத்தில் கொண்டு ஊரக வளர்ச்சித்துறை சார்பாக சோலார் பேனல் அமைத்து அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து மின் மோட்டார் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

சின்ன ஏரிக்கு நீர் செல்வதன் மூலமாக பண்ணந்தூர், பாப்பாரப்பட்டி, தாமோதரஅள்ளி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 350 ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறுகிறது. சோலார் பேனல் அமைக்க பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 23 லட்சம் வழங்குவதாக சி.வி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

இந்த நிதியை கொண்டு 30 கிலோ வாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் சோலார் பேனல் அமைத்து மின் மோட்டார் இயக்கப்படும். இப்பணிகளை விரைவில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர் களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெரியசாமி, உதவி பொறியாளர் அருள், வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், சோலார் பேனல் பொறியாளர் செந்தில்குமார், போச்சம்பள்ளி தாசில்தார் முனுசாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர், வருவாய் ஆய்வாளர் செல்வராஜ், கிராம நிர்வாக அலுவலர் சுரேந்திரன், மாவட்ட வேளாண்மை விற்பனைக்குழு இயக்குனர் பிரபாகரன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story