நாங்கள் அனுபவித்த கஷ்டங்கள் போதும்; காங்கிரசுடன் மீண்டும் கூட்டணி கிடையாது - தேவேகவுடா அறிவிப்பு
நாங்கள் அனுபவித்த கஷ்டங்கள் போதும் என்றும், காங்கிரசுடன் மீண்டும் கூட்டணி கிடையாது என்றும் தேவேகவுடா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் முழு மெஜாரிட்டி கிடைக்காததால், காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். இந்த கூட்டணி அரசு 14 மாதங்கள் ஆட்சி செய்தது. அதன் பிறகு 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை அடுத்து குமாரசாமி அரசு கவிழ்ந்தது.
கூட்டணி அரசு கவிழ சித்தராமையா தான் காரணம் என்று தேவேகவுடா மற்றும் குமாரசாமி பகிரங்கமாக குற்றம்சாட்டினார். பதிலுக்கு சித்தராமையா, குமாரசாமி அரசு கவிழ தேவேகவுடா குடும்பத்தினரே காரணம் என்று குற்றம்சாட்டினார். இரு கட்சியினரும் பரஸ்பரம் குற்றம்சாட்டினர். காங்கிரசுடன் கூட்டணி வைத்து தவறு செய்துவிட்டேன் என்று தேவேகவுடா கூறினார். இனி வரும் காலத்தில் காங்கிரசுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் கிடைக்காவிட்டால், காங்கிரசுடன் கூட்டணி குறித்து தேவேகவுடா கருத்து தெரிவித்தார். இந்த விஷயத்தில் சோனியா காந்தியின் முடிவே இறுதியானது என்றும், அவர் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையே, பா.ஜனதா தலைவர்கள் காங்கிரஸ் கட்சியும், ஜனதா தளம்(எஸ்) கட்சியும் உள்ஒப்பந்தம் செய்துள்ளதாக குற்றம்சாட்டி வருகிறார்கள். ஒருவேளை இடைத்தேர்தலில் பா.ஜனதா குறைந்த இடங்களில் வெற்றி பெற்றால், எடியூரப்பா தலைமையிலான ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் என்றும், காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சி மீண்டும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் தேவேகவுடா, காங்கிரசுடன் கூட்டணி வைத்து மீண்டும் தவறு செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் முதல்-மந்திரியாக இருந்த குமாரசாமிக்கு, தொடக்கம் முதல் ஆட்சி நிறைவடையும் வரை தொல்லை கொடுத்தனர். இப்போதும் குமாரசாமிக்கு இம்சை கொடுப்பது குறையவில்லை. எங்களுக்கு தற்போது புரிதல் வந்துவிட்டது. காங்கிரசுடன் மீண்டும் கூட்டணி வைக்க வேண்டுமென்றால் நாங்களும், சித்தராமையாவும் ஒன்றுசேர வேண்டும் அல்லவா?.
ஆளும் பா.ஜனதா அரசு எப்படி கவிழும்?. முதல்-மந்திரி எடியூரப்பா கையில் 105 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். கூட்டணி அரசில் நாங்கள் அனுபவித்த கஷ்டங்கள் போதும். இடைத்தேர்தலுக்கு பிறகு காங்கிரசுடன் கூட்டணி வைத்து மீண்டும் தவறு செய்ய மாட்டேன்.
இவ்வாறு தேவேகவுடா கூறினார்.
Related Tags :
Next Story