கொட்டித்தீர்த்த கனமழை: வீடுகளை சூழ்ந்த மழை வெள்ளம் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


கொட்டித்தீர்த்த கனமழை: வீடுகளை சூழ்ந்த மழை வெள்ளம் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
x
தினத்தந்தி 1 Dec 2019 11:00 PM GMT (Updated: 1 Dec 2019 9:07 PM GMT)

பெரம்பலூர் மாவட்ட பகுதியில் கன மழை பெய்ததால் வீடுகளை தண்ணீர் சூழ்ந்தன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வருகிறது. இந்த நிலையில் பருவ மழையை எதிர் கொள்ளும் விதமாக அரியலூர் மாவட்ட வருவாய்த்துறை, காவல் துறை, வளர்ச்சித் துறை மற்றும் பொதுப்பணித் துறையினர்கள் இணைந்து குழுவாக செயல்பட்டு வருகின்றனர். அதன்படி தற்போது பெய்து வரும் கனமழையால் நீர்வரத்து வாரிகள் சீர் செய்யப்படாத பகுதிகளில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றுவதோடு ஏரிகள் நிரம்பி உடையும், அபாய நிலையில் உள்ள ஏரி கரைகளை பலப்படுத்துவது, தண்ணீர் வெளியேறும் வழிகளை சீரமைப்பது போன்ற பணிகளை துரிதமாக செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் செந்துறை அருகே உள்ள அசாவீரன்குடிக்காடு கிராமத்தில் உள்ள காஞ்சனா குளம் நிரம்பி தண்ணீர் வெளியேற வழியில்லாமல் குடியிருப்பு பகுதிக்குள் புகும் அபாயம் ஏற்பட்டது. இதனை அறிந்த குவாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் செந்துறை தாசில்தார் தேன்மொழி உள்பட அதிகாரிகள் விரைந்து சென்று ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறும் வழியில் உள்ள ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி அதிகமாக உள்ள குளத்து தண்ணீரை வடிய செய்தனர்.

தண்ணீர் சூழ்ந்தது

இதுகுறித்து தகவலறிந்த அரியலூர் மாவட்ட திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து, இதுபோன்ற நீர்வரத்து அருகில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டு சென்றார். அதேபோன்று செந்துறையை அடுத்த வாளரக்குறிச்சி கிராமத்தில் வரத்து வாய்க்கால் சீரமைக்க படாததால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது. இதனை அறிந்த அதிகாரிகள் விரைந்து சென்று வரத்து வாரியை சீரமைப்பு செய்து மழைநீரை வடிய செய்தனர். ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமத்தில் உள்ள நைனார் ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேற முடியாமல் கரை உடையும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமே‌‌ஷ்பாபு மற்றும் போலீசார் விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் கரையை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து அங்கு வந்த ஜெயங்கொண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வருவாய்த்துறையினர் ஏரி தண்ணீர் வெளியேறும் வகையில் வாரியை சீரமைத்து ஏரியில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.

தொடர் மழையின் காரணமாக அரியலூர் செட்டி ஏரி நிரம்பி வழிகிறது. இதனால் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். நகரில் மழைநீர் தேங்கியது. இதனால் அப்பகுதி பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதித்தது.

கோரிக்கை

உடையார்பாளையம் அருகே உள்ள துளாரங்குறிச்சி, கச்சிபெருமாள், இடையார், தத்தனூர், கழுமங்கலம் பரணம், மணகெதி, நகல்குழி, பிலாக்குறிச்சி உள்பட கிராமங்களில் உள்ள ஏரிகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. தொடர்ந்து பெய்த கன மழையால் முந்திரி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த நிலையில் உடையார்பாளையம் அருகே மூர்த்தியான் கிராமத்தில் பெய்த கனமழையால் அக்கிராமத்தில் உள்ள குடிசை வீடுகளில் மழைவெள்ளம் புகுந்ததால், அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் பாம்பு, வி‌‌ஷப்பூச்சிகள் வீடுகளில் வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மழைநீர் வடிவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஜெயங்கொண்டம் அருகே உய்யகொண்டான் ஏரி பெண்கள் படித்துறை பகுதிக்கு அருகே உள்ள மதகில் இருந்து அதிகப்படியான தண்ணீர் ஏரியில் இருந்து வெளியானது. இந்த மழைநீர் மற்றும் ஏரியில் இருந்து வரும் அதிகப்படியான தண்ணீர் சாலைக்கு அருகே ஜெயங்கொண்டம் அய்யனார் கோவில் தெருவிற்கு செல்லும் பாதையிலுள்ள பாலம் புதைந்து கிடப்பதால் தண்ணீர் செல்ல வழியின்றி பெருக்கெடுத்து சாலையில் சென்றது. இதனால் ஜெயங்கொண்டம்- சிதம்பரம் மெயின் ரோட்டில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. அதேபோல சிதம்பரம் சாலையில் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். எனவே ஜெயங்கொண்டம்- சிதம்பரம் சாலையில் அய்யனார் கோவில் தெரு செல்லும் முகப்பில் உள்ள பாலத்தை உயர்த்தி கட்ட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story