இலவச வீட்டுமனைப்பட்டா பெற்றவர்களுக்கு வேறு இடம் வழங்க வேண்டும் - திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு
இடுவாய் பாரதிபுரத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா பெற்றவர்களுக்கு வேறு இடம் வழங்க வேண்டும் என்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
திருப்பூர்,
தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நேற்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற இருந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. ஆனால் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மனுக்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கு முன்பு பொதுமக்கள் மனுக்களை போடும் வகையில் பெரிய பெட்டி வைக்கப்பட்டு இருந்தது. பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்த மனுக்களை அந்த பெட்டியில் போட்டு விட்டு சென்றனர்.
திருப்பூரை அடுத்த இடுவாய் பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், எங்களுக்கு இடுவாய் பாரதிபுரம் பகுதியில் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா சமீபத்தில் கொடுக்கப்பட்டது. அந்த இடம் ஏற்கனவே இலவச வீட்டுமனைப்பட்டா கொடுக்கப்பட்டு, அவர்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் குடியேறாததால் அந்த பட்டாவை ரத்து செய்து, அந்த இடத்தை எங்களுக்கு ஒதுக்கீடு செய்து கொடுத்தனர். இதைத்தொடர்ந்து எங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் வீடு கட்ட சென்றபோது, ஏற்கனவே பட்டா பெற்று ரத்து செய்யப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் எங்களை அந்த பகுதிக்குள் நுழைய தடுக்கிறார்கள். எனவே எங்களுக்கு வேறு இடம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
தமிழ்புலிகள் கட்சியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் 15 வேலம்பாளையம் ரிங் ரோட்டில் அமைந்துள்ளது. இங்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வருவதால் ரோட்டின் இருபுறம் வாகனங்களை நிறுத்தி செல்கிறார்கள். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அப்பகுதியில் காலியிடம் இருப்பதால் அங்கு வாகன நிறுத்த வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
குடிமங்கலம் ஆத்துகிணத்துப்பட்டியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள 50 பேருக்கு தமிழக அரசு சார்பில் இலவச கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் கறவை மாடுகள் வழங்கப்பட்டது. தகுதியான பயனாளிகள் இருந்தும், ஏற்கனவே மாடுகள் வைத்துள்ளவர்களுக்கு கறவை மாடுகள் வழங்கப்பட்டுள்ளது. எனவே தகுதியான பயனாளிகளுக்கு கறவை மாடுகள் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
வீரபாண்டி சென்னிமலைபாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி தெய்வசிகாமணி என்பவர் அளித்த மனுவில், பல்லடம் அருகே ப.வடுகபாளையத்தில் எனக்கு சொந்தமான இடத்தில் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது. தற்போதைய சந்தை நிலவரப்படி எனது நிலத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும். எவ்வளவு நிலம் எடுக்கப்படுகிறது என்பது உள்ளிட்ட விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
கோவில்வழி புதுப்பிள்ளையார் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், திருப்பூர் மாநகராட்சியின் 60-வது வார்டில் நாங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் ஓரிடத்தில் நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள். இதனால் எங்களுக்கு பயன் இல்லை. அந்த இடத்தில் ரேஷன் கடையோ, அங்கன்வாடி மையமோ கட்டினால் பயன் உள்ளதாக இருக்கும். ஏற்கனவே அந்த பகுதியில் 2 நீர்த்தேக்க தொட்டி உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story