கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் ரத்து - புகார் பெட்டியில் மனுக்களை போட்டு சென்றனர்


கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் ரத்து - புகார் பெட்டியில் மனுக்களை போட்டு சென்றனர்
x
தினத்தந்தி 3 Dec 2019 3:45 AM IST (Updated: 2 Dec 2019 10:42 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை கேட்பு கூட்டம் நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டதால், பொதுமக்கள் கொண்டு வந்த மனுக்களை புகார்பெட்டியில் போட்டு சென்றனர்.

கள்ளக்குறிச்சி,

புதிதாக உதயமான கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதன் முதலாக பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் கிரண்குராலா தலைமையில் நேற்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தைசேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களுடைய குறைகளை மனுக்களாக கொடுக்க கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து காத்திருந்தனர். அதேப்போல் அனைத்து துறை அதிகாரிகளும் கூட்டத்திற்கு வந்து அமர்ந்திருந்தனர்.

இந்த நிலையில் மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் தேதியை நேற்று காலையில் அறிவித்ததால் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கிரண்குரலா வரவில்லை.

எனவே அங்கிருந்த மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா, பொதுமக்களிடம் தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவித்ததால் தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு கலெக்டர், மனுக்கள் வாங்க வரவில்லை. இதனால் இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் கொண்டு வந்த மனுக்களை புகார் பெட்டியில் போட்டு விட்டு செல்லுங்கள் என்று தெரிவித்தார்.

இதனால் பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்த மனுக்களை பெட்டியில் போட்டுவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story