சத்தி அருகே,கார்-லாரி பயங்கர மோதல்: சப்-இன்ஸ்பெக்டர், மனைவி-குழந்தை உள்பட 4 பேர் சாவு
சத்தியமங்கலம் அருகே காரும், லாரியும் பயங்கரமாக மோதிக்கொண்ட விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர், மனைவி, குழந்தை உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.
சத்தியமங்கலம்,
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள விநாயகாபுரத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 39). இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புதுக்குய்யனூரில் உள்ள தமிழ்நாடு அதிரடிப்படை முகாமில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
அவருடைய மனைவி தேவிபாலா (38). இவர்களுக்கு ஜனனி (1) என்ற பெண் குழந்தை இருந்தது. செல்வம் குடும்பத்துடன் சத்தியமங்கலம்-பவானிசாகர் செல்லும் ரோட்டில் தங்கியிருந்தார்.
இந்த நிலையில் செல்வம் சத்தியமங்கலம் அருகே வடவள்ளியில் வாடகைக்கு வீடு பார்த்திருந்தார். இதைத்தொடர்ந்து வீடு மாற்ற பொருட்களை எடுத்து செல்வதற்காக நேற்று மாலை 5 மணி அளவில் அந்த பகுதியை சேர்ந்த கூலிதொழிலாளியான முருகேசன் (26) என்பவரை காரில் அழைத்துக்கொண்டு சென்றார்.
காரை செல்வம் ஓட்டினார். அவரது இருக்கைக்கு அருகே மனைவியும், குழந்தையும் உட்கார்ந்து இருந்தனர். முருகேசன் காரின் பின்பகுதியில் அமர்ந்து இருந்தார்.
இந்த கார் வடவள்ளி அருகே சென்றபோது எதிரே கர்நாடகாவில் இருந்து சத்தியமங்கலம் பகுதிக்கு பாரம் ஏற்றியபடி ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக காரும், லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்ெகாண்டன.
விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கி சேதம் அடைந்தது. உடனே டிரைவர் லாரியில் இருந்து இறங்கி அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி 4 பேரும் பலியானார்கள்.
விபத்து நடந்ததும் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுபற்றி சத்தியமங்கலம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் 4 பேரையும் காரின் கதவை கடப்பாரையால் நெம்பி மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு சப்-இன்ஸ்பெக்டர் செல்வம், தேவிபாலா, குழந்தை ஜனனி, முருகேசன் ஆகிய 4 பேரும் ரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்கப்பட்டனர்.
பிணங்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு் தப்பிச்சென்ற லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள். விபத்தில் இறந்த 4 பேரின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. மேலும் அந்த பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
Related Tags :
Next Story