கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் 10 ஒன்றியங்களுக்கு 2 கட்டமாக தேர்தல் 3,586 உள்ளாட்சி பதவிகளுக்கு நடக்கிறது


கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் 10 ஒன்றியங்களுக்கு 2 கட்டமாக தேர்தல் 3,586 உள்ளாட்சி பதவிகளுக்கு நடக்கிறது
x
தினத்தந்தி 3 Dec 2019 4:00 AM IST (Updated: 3 Dec 2019 1:22 AM IST)
t-max-icont-min-icon

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களுக்கு வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. மொத்தம் உள்ள 3 ஆயிரத்து 586 பதவிகளுக்கு இந்த தேர்தல் நடக்கிறது.

கிரு‌‌ஷ்ணகிரி,

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு நேற்று வெளியானது. மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி நீங்கலாக கிராம ஊராட்சி பதவிகளுக்கு வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் மாநகராட்சி, கிரு‌‌ஷ்ணகிரி நகராட்சி, காவேரிப்பட்டணம், நாகோஜனஹள்ளி, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, ஊத்தங்கரை, பர்கூர் ஆகிய 6 பேரூராட்சிகளுக்கு தற்போது தேர்தல் இல்லை. இதைத் தவிர மாவட்டத்தில் கிரு‌‌ஷ்ணகிரி, கெலமங்கலம், பர்கூர், வேப்பனப்பள்ளி, சூளகிரி, தளி, ஓசூர், காவேரிப்பட்டணம், ஊத்தங்கரை, மத்தூர் ஆகிய 10 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.

2 கட்டமாக நடக்கிறது

இதற்கு 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அதன்படி வருகிற 27-ந் தேதி தளி, ஓசூர், காவேரிப்பட்டணம், ஊத்தங்கரை, மத்தூர் ஒன்றியங்களுக்கும், 30-ந் தேதி கிரு‌‌ஷ்ணகிரி, கெலமங்கலம், பர்கூர், வேப்பனப்பள்ளி, சூளகிரி ஒன்றியங்களுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் பிரிவு அலுவலர்கள் தயார் செய்து மாநில தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கிருந்து ஒப்புதல் வந்த உடன் முறைப்படி அறிவிப்பு வெளியிடப்படும்.

மாவட்டத்தில் மொத்தம் 333 ஊராட்சிகள் உள்ளன. இந்த 333 ஊராட்சிகளுக்கு 333 ஊராட்சி தலைவர்கள், 3 ஆயிரத்து 9 உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதே போல மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 23 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மேலும் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு 221 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மொத்தம் 3 ஆயிரத்து 586 உள்ளாட்சி பதவிக்கு இந்த தேர்தல் நடக்கிறது.

4 ஓட்டு போடுகிறார்கள்

இதன் மூலம் 10 ஒன்றியங்களை சேர்ந்த வாக்காளர்கள் ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு வார்டு உறுப்பினர் ஆகிய 4 பதவிகளுக்கு தலா ஒரு ஓட்டு வீதம் 4 ஓட்டுகள் போடுகிறார்கள்.

ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு கட்சி சார்பற்றவர்களும், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு கட்சி சார்புடையவர்களும் போட்டியிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story