மாவட்டத்தில் 4,077 உள்ளாட்சி பதவிகளுக்கு 2 கட்டமாக தேர்தல்


மாவட்டத்தில் 4,077 உள்ளாட்சி பதவிகளுக்கு 2 கட்டமாக தேர்தல்
x
தினத்தந்தி 3 Dec 2019 3:45 AM IST (Updated: 3 Dec 2019 3:00 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்தில் 4,077 உள்ளாட்சி பதவிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

திருச்சி,

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தன. அரசியல் கட்சியினரும் தங்களது கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் மனுக்களை வினியோகித்தனர். கட்சி நிர்வாகிகளும் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து கொடுத்தனர். உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிப்பு நேற்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை சென்னையில் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்தார். இதில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு வருகிற 27, 30-ந் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பதவிகளுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகவில்லை.

4,077 உள்ளாட்சி பதவிகள்

திருச்சி மாவட்டத்தில் அந்தநல்லூர், மணிகண்டம், திருவெறும்பூர், லால்குடி, புள்ளம்பாடி, முசிறி, தொட்டியம், தா.பேட்டை, உப்பிலியபுரம், துறையூர், மண்ணச்சநல்லூர், மருங்காபுரி, மணப்பாறை, வையம்பட்டி ஆகிய 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 24 மாவட்ட கவுன்சிலர், 241 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 404 கிராம ஊராட்சி தலைவர், 3,408 கிராம ஊராட்சி கவுன்சிலர் என மொத்தம் 4,077 உள்ளாட்சி பதவிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு ஏற்கனவே கடந்த 2016-ம் ஆண்டு திட்டமிடப்பட்ட வாக்குச்சாவடிகளே அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஒரு வாக்காளர், 4 பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தங்களது வாக்கினை பதிவு செய்வார்கள். தேர்தலில் 4 விதமான வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும். வேட்பு மனு தாக்கல் வருகிற 6-ந் தேதி தொடங்கி 13-ந் தேதி வரை நடைபெற உள்ளது. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான வேட்பு மனு தாக்கல் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி அலுவலகத்திலும், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் ஆகியோர்களுக்கான வேட்புமனு தாக்கல் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் நடைபெறும்.

தேர்தல் செலவினம்

சாதாரண நேரடி தேர்தல் முடிந்த பின் மாவட்ட ஊராட்சி தலைவர், மாவட்ட ஊராட்சி துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவர், கிராம ஊராட்சி துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்தல் ஜனவரி மாதம் 11-ந் தேதி நடைபெற உள்ளது. வேட்பாளர்களுக்கான அதிகபட்ச தேர்தல் செலவின வரம்பானது கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு ரூ.9 ஆயிரமும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்களுக்கு ரூ.34 ஆயிரமும், ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் வேட்பாளர்களுக்கு ரூ.85 ஆயிரமும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்களுக்கு ரூ.1 லட்சத்து 70 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் உரிய அலுவலரிடம் தேர்தல் செலவின கணக்குகளை ஒப்படைக்க வேண்டும். ஒப்படைக்க தவறுபவர்கள் மீது தேர்தல் ஆணையத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இயலாதவாறு 3 ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.

அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும், தேர்தல் நடத்தை விதிகளை கடைப்பிடித்து, தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெற தேர்தல் ஆணையத்தோடு ஒத்துழைக்க வேண்டும் என்று கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

வாக்குப்பதிவு

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்பில் எந்தெந்த பதவிக்கு 27, 30-ந் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என்பது குறித்து நேற்று மாலை வரை எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இது குறித்து கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘மாநில தேர்தல் ஆணையத்தில் இருந்து 2 கட்டமாக நடைபெற உள்ள தேர்தலில் எந்தெந்த பதவிக்கு வாக்குப்பதிவு நடைபெறும் என்ற விவரம் எங்களுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. அந்த விவரம் வந்ததும் 27, 30-ந் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள உள்ளாட்சி பதவிகள் விவரம் தெரியவரும்’ என்றனர்.

Next Story