எதிர்க்கட்சி தலைவர் முதல்-மந்திரி, மந்திரிகளுக்கு அரசு பங்களா ஒதுக்கீடு: சகன் புஜ்பால் மீண்டும் ராசியில்லாத வீட்டுக்கு செல்கிறார்


எதிர்க்கட்சி தலைவர் முதல்-மந்திரி, மந்திரிகளுக்கு அரசு பங்களா ஒதுக்கீடு: சகன் புஜ்பால் மீண்டும் ராசியில்லாத வீட்டுக்கு செல்கிறார்
x
தினத்தந்தி 4 Dec 2019 4:15 AM IST (Updated: 4 Dec 2019 12:54 AM IST)
t-max-icont-min-icon

முதல்-மந்திரி, மந்திரிகள் மற்றும் எதிர்க்கட்சி தலைவருக்கு அரசு பங்களா ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் சகன் புஜ்பால் மீண்டும் ராசியில்லாத வீட்டுக்கு செல்கிறார்.

மும்பை,

மும்பை மலபார்ஹில் பகுதியில் முதல்-மந்திரியின் அரசு குடியிருப்பான வர்ஷா பங்களா உள்ளது. உத்தவ் தாக்கரே மராட்டியத்தின் புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்றதை அடுத்து வர்ஷா பங்களா அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

இதுதவிர சட்டசபை எதிா்க்கட்சி தலைவர் மற்றும் மந்திரிகளுக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாக்கள் குறித்த விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிசுக்கு மலபார்ஹில் நாராயண் தபோல்கர் சாலையில் உள்ள சாகர் பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டில் இருந்து அரபி கடலை பார்த்து ரசிக்க முடியும்.

சகன் புஜ்பாலுக்கு அவர் ஏற்கனவே மந்திரியாக இருந்தபோது தங்கியிருந்த ராம்டெக் பங்களா மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டில் இருந்தபடியும் கடல் அழகை பார்த்து ரசிக்க முடியும். ராம்டெக் பங்களாவில் நீண்டகாலம் தங்கியிருந்தவர் சகன் புஜ்பால் ஆவார். இவர் பொதுப்பணித்துறை மந்திரியாக இருந்தபோது, இந்த பங்களாவில் மிகப்பெரிய அளவிலான சீரமைப்பு பணிகளை செய்து இருந்தார். எனினும் இந்த பங்களா ராசியில்லாத வீடாக கருதப்படுகிறது. ராம்டெக் பங்களாவில் தங்கியிருந்த சகன்புஜ்பால் மகாராஸ்டிரா சதன் வழக்கில் சிக்கி 2 ஆண்டுகள் ஜெயிலில் இருந்தார்.

இதேபோல அந்த பங்களாவில் தங்கியிருந்த பா.ஜனதாவை சேர்ந்த மூத்த தலைவர் ஏக்நாத் கட்சேயும் ஊழல் புகாரில் சிக்கி மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

மேலும் முன்னாள் முதல்-மந்திரி விலாஸ்ராவ் தேஷ்முக் ராம்டெக் பங்களாவில் தங்கியிருந்த போது 1995-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தோல்வியை தழுவினார்.

இதேபோல முன்னாள் துணை முதல்-மந்திரி கோபிநாத் முண்டேவும் இந்த பங்களாவில் தங்கியிருந்த சமயத்தில் தான் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பதவி இழக்கும் நிலைக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் சகன்புஜ்பால் மீண்டும் அதே ராம்டெக் பங்களாவிற்கு செல்ல உள்ளார்.

இதுதவிர மந்திரி ஜெயந்த் பாட்டீலுக்கு முன்னாள் மந்திரி வினோத் தாவ்டே தங்கியிருந்த சேவா சதனும், மந்திரி ஏக்நாத் ஷிண்டேவுக்கு பங்கஜா முண்டே தங்கியிருந்த ராயல் ஸ்டோன் பங்களாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிய மந்திரிகளுக்கு பங்களாக்கள் ஒதுக்கப்பட்ட போதும் பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரிகள் யாரும் இன்னும் சாவியை பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story