திருப்பூர், பல்லடத்தில் 36 கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை


திருப்பூர், பல்லடத்தில் 36 கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை
x
தினத்தந்தி 3 Dec 2019 11:00 PM GMT (Updated: 3 Dec 2019 9:22 PM GMT)

திருப்பூர், பல்லடத்தில் 36 கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மணி, கேசவராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் திருப்பூர் மாநகராட்சி வடக்கு மற்றும் பல்லடம் பஸ் நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்தந்த பகுதிகளில் உள்ள தள்ளுவண்டி கடைகள், பானிபூரி கடைகள், பாஸ்ட் புட் கடைகள் உள்பட 36 கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

இதில் கெட்டுப்போன காய்கறிகள் 5 கிலோ, சாயம் கலந்த டீத்தூள் 6 கிலோ, ஜூஸ் வகைகள் 6 லிட்டர், லேபிள் மற்றும் தேதி இல்லாத தின்பண்டங்கள் 18 கிலோ, அழுகிய பழங்கள் 7 கிலோ, பாலித்தீன் பைகள் 4 கிலோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும், சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்காத 7 கடைகளுக்கு நோட்டீசும் வழங்கப்பட்டது.

நோட்டீஸ்

உரிமம் பெறாமல் உணவு வணிகம் செய்து வரும் கடை உரிமையாளர்களுக்கு உடனடியாக உரிமம் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இதுபோல் தண்ணீர் தேக்கி வைத்திருந்த டிரம் மற்றும் பாத்திரங்களில் 4 இடங்களில் கொசுப்புழு இருப்பது கண்டறியப்பட்டு தண்ணீரை கொட்டி கொசுப்புழுக்கள் அழிக்கப்பட்டது. மேலும், அதன் உரிமையாளர்களுக்கு நோட்டீசும் வழங்கப்பட்டது.

இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

ஜூஸ் தயார் செய்து விற்பனை செய்கிறவர்கள் தரமான பழங்கள், தரமான பொருட்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் ஐஸ் கட்டிகள் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்திய எண்ணெயை திரும்ப, திரும்ப பயன்படுத்தக்கூடாது. உணவு பொருட்களில் கலப்படம் செய்கிறவர்கள் மற்றும் தரமற்ற பொருட்களை விற்பனை செய்கிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

Next Story