ஈரோடு மாவட்டத்தில் 14 ஒன்றியங்களுக்கும் 2 கட்டமாக தேர்தல் கலெக்டர் சி.கதிரவன் அறிவிப்பு


ஈரோடு மாவட்டத்தில் 14 ஒன்றியங்களுக்கும் 2 கட்டமாக தேர்தல் கலெக்டர் சி.கதிரவன் அறிவிப்பு
x
தினத்தந்தி 3 Dec 2019 10:45 PM GMT (Updated: 3 Dec 2019 9:48 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் 14 ஒன்றியங்களுக்கும் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் சி.கதிரவன் அறிவித்தார்.

ஈரோடு,

தமிழகம் முழுவதும் 27 மற்றும் 30-ந் தேதிகளில் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. நகர்ப்புற பகுதிகளை தவிர்த்து ஊரகப்பகுதிகளுக்கு மட்டும் இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் உள்ள 225 கிராம ஊராட்சிகளுக்கு தேர்தல் நடக்கிறது. மாவட்ட ஊராட்சிக்குழு கவுன்சிலர்கள், ஒன்றியக்குழு கவுன்சிலர்கள், கிராம ஊராட்சி தலைவர்கள், கிராம ஊராட்சி கவுன்சிலர்கள் என்று 2 ஆயிரத்து 524 பதவிகளுக்கு இந்த தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படவில்லை. 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் இதுகுறித்து அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி ச.கவிதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மு.பாலகணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பதவிகள்

அவர்கள் மத்தியில் கலெக்டர் சி.கதிரவன் பேசியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்த பட்டியலின் படி நடைபெற உள்ளது. வேட்பு மனுக்கள் 6-ந் தேதி முதல் 13-ந் தேதிவரை பெறப்படும். வேட்பு மனு 16-ந் தேதி ஆய்வு செய்யப்படும். 18-ந் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெறலாம். முதல் கட்ட தேர்தல் 27-ந் தேதியும், 2-ம் கட்ட தேர்தல் 30-ந் தேதியும் நடக்கிறது.

வாக்கு எண்ணிக்கை 2-1-2020 நடக்கிறது. தேர்ந்து எடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் 6-1-2020 அன்று பதவி ஏற்பார்கள். மறைமுக தேர்தல் கூட்ட நாள் 11-1-2020 அன்று நடக்கிறது.

நமது மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் தேர்தல் நடைபெறுகிறது. மாவட்ட ஊராட்சிக்குழு கவுன்சிலர்கள் 19 பேர் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். ஒன்றியக்குழு கவுன்சிலர்கள் 183 பேரும், கிராம ஊராட்சி தலைவர்கள் 225 பேரும், கிராம ஊராட்சி கவுன்சிலர்கள் 2 ஆயிரத்து 97 பேர் என வாக்காளர்கள் நேரடியாக 2 ஆயிரத்து 524 பதவிகளுக்கு உரியவர்களை தேர்ந்து எடுக்கிறார்கள். மாவட்ட ஊராட்சிக்குழு மற்றும் ஒன்றியக்குழு கவுன்சிலர்கள் தேர்தல் கட்சி சின்னங்கள் அடிப்படையில் நடைபெறும். சுயேச்சைகளுக்கு தேர்தல் விதிமுறைகளின் படி சின்னங்கள் வழங்கப்படும். கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர் பதவிகளுக்கு கட்சி சார்பற்ற சின்னங்கள் வழங்கப்படும். மாவட்டக்குழு தலைவர்-துணைத்தலைவர், ஒன்றியக்குழு தலைவர்- துணைத்தலைவர், கிராம ஊராட்சி துணைத்தலைவர் என 255 பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.

ஒன்றியங்கள்

ஈரோடு மாவட்டத்தில் தாளவாடி, டி.என்.பாளையம், கோபி, நம்பியூர், ஈரோடு, மொடக்குறிச்சி ஆகிய 7 ஒன்றியங்களுக்கு 27-ந் தேதி முதல் கட்ட தேர்தல் நடக்கிறது. பவானிசாகர், சத்தியமங்கலம், பெருந்துறை, சென்னிமலை, பவானி, அந்தியூர், அம்மாபேட்டை ஆகிய 7 ஒன்றியங்களுக்கு 30-ந் தேதி 2-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. மேற்கண்டவாறு மாவட்ட நிர்வாகம் மூலம் பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது.

தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டு இருப்பதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து உள்ளன. ஆனால் இது முழுமையாக ஊரகப்பகுதிகளில் மட்டுமே நடைமுறையில் இருக்கும். ஈரோடு மாநகராட்சி, 4 நகராட்சிகள் மற்றும் 42 பேரூராட்சிகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்காது. ஆனால், கிராமத்தையொட்டிய நகர்பகுதிகளில் அரசு நலத்திட்டங்கள் தொடர்பான நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெறாது. ஒட்டு மொத்தமாக மாவட்டம் முழுவதும் மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டு உள்ள அரசு வாகனங்கள் திரும்பப்பெறப்பட்டு உள்ளது. எம்.எல்.ஏ. அலுவலகங்கள் மூடப்பட்டு இருக்கின்றன. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி அலுவலகம் முழுமையாக ஈரோடு மாநகராட்சி பகுதிக்கு உள்பட்ட தொகுதியாக இருப்பதால் அந்த அலுவலகம் திறக்கப்படும்.

வைப்புத்தொகை

கிராம ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் ரூ.200 வைப்புத்தொகை ெசலுத்த வேண்டும். கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு ரூ.600, ஒன்றியக்குழு கவுன்சிலர் பதவிக்கு ரூ.600, மாவட்ட ஊராட்சிக்குழு கவுன்சிலர் பதவிக்கு ரூ.1000 வைப்புத்தொகை செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கு வைப்புத்தொகையாக கிராம ஊராட்சி கவுன்சிலர் ரூ.100, ஊராட்சி தலைவர் ரூ.300, ஒன்றியக்குழு கவுன்சிலர் ரூ.300, மாவட்ட ஊராட்சிக்குழு கவுன்சிலர் ரூ.500 என செலுத்த வேண்டும். தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளபடி வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை உரிய நேரத்தில் சமர்ப்பிக்க வேண்டும். வேட்புமனுக்கள் செய்ய வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

உள்ளாட்சி தேர்தல் என்பது உணர்ச்சிப்பூர்வமாக நடைபெறும் தேர்தலாகும். போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் உறவினர்களாகவோ, நண்பர்களாகவோ இருப்பீர்கள். தேர்தலில் போட்டி எந்த வகையில் இருந்தாலும், தேர்தலுக்கு பின்னர் எந்தவகையான விரோதங்களும் இல்லாதவகையில் மகிழ்ச்சியாக வாழ்வு அமைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் ஒவ்ெவாருவரும் இந்த தேர்தலை அணுக வேண்டும்.

வாக்குச்சீட்டுகள்

தேர்தலின்போது வாக்காளர்களுக்கு 4 வண்ணங்களில் வாக்குச்சீட்டுகள் தரப்படும். மின்னணு வாக்குப்பதிவு கிடையாது. வாக்குச்சீட்டு முறைதான். ஊராட்சி தலைவர் பதவிக்கு இளஞ்சிவப்பு, கவுன்சிலர் பதவிக்கு வெள்ளை, ஒன்றியக்குழு கவுன்சிலர் பதவிக்கு மஞ்சள், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு பச்சை என வாக்குச்சீட்டு வழங்கப்படும். இரட்டை கவுன்சிலர் பதவி தேர்ந்து எடுக்கப்படும் கிராம ஊராட்சி வார்டுகளில் வெள்ளை மற்றும் நீல வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும். இந்த வார்டுகளில் மட்டும் வாக்காளர்கள் 5 ஓட்டுகள் போட வேண்டும். வாக்குகள் அனைத்தும் ஒரே பெட்டியில் போடப்படும். எண்ணிக்கையின் போது நிறம் வாரியாக பிரிக்கப்பட்டு, சின்னம் வாரியாக எண்ணிக்கை நடைபெறும். மாவட்டத்தில் பதற்றத்துக்கு உரிய வாக்குச்சாவடிகள் பட்டியல் ஏற்கனவே உள்ளது. அவை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்படும். 2 ஒன்றியங்களுக்கு ஒரு பறக்கும்படை என்ற அளவில் கண்காணிப்பு இருக்கும். மேலிட பார்யைாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட உள்ளார்.

தேர்தல் குறித்து அந்தந்த வட்டார அளவில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அரசியல் கட்சியினருக்கு ஆலோசனை கூட்டங்கள் நடத்தி அனைத்து விவரங்களையும் தெரிவிப்பார்கள். தேர்தல் குறித்த சந்தேகங்களை அந்தந்த பகுதி தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் அரசியல் கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு கலெக்டர் சி.கதிரவன் கூறினார். அவர் அரசியல் கட்சியினரின் பல்வேறு சந்தேகங்களுக்கும் பதில் அளித்தார்.

கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) முருகன், ஈரோடு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சார்லஸ் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story