பரிசு விழுந்ததாக கூறி துணிகரம் செல்போனி்ல் குறுஞ்செய்தி அனுப்பி எலக்ட்ரீசியனிடம் ரூ.8 லட்சம் மோசடி


பரிசு விழுந்ததாக கூறி துணிகரம் செல்போனி்ல் குறுஞ்செய்தி அனுப்பி எலக்ட்ரீசியனிடம் ரூ.8 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 4 Dec 2019 10:00 PM GMT (Updated: 4 Dec 2019 2:40 PM GMT)

பரிசு விழுந்ததாக கூறி செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பி எலக்ட்ரீசியனிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகர்கோவில்,

கன்னியாகுமரி அருகே அஞ்சுகிராமம் ஜேம்ஸ்டவுன் காட்டுவிளையை சேர்ந்தவர் ஜேக்கப்ராஜா, எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி சகாயஅனிஷா. இவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

என் கணவரின் செல்போன் எண்ணுக்கு கடந்த 27-9-2019 அன்று ஒரு குறுஞ்செய்தி வந்தது. அந்த குறுஞ்செய்தியில் என் கணவருக்கு வாட்ஸ்அப் குளோபல் அவார்டு வின்னர் மூலம் ரூ.2 கோடியே 75 லட்சம் பரிசு விழுந்திருப்பதாக கூறப்பட்டு இருந்தது. மேலும் அந்த பரிசு தொகையை பெற தொடர்பு கொள்ளும்படி 2 செல்போன் எண்களும் கொடுக்கப்பட்டு இருந்தன. அந்த செல்போன் எண்கள் மூலமாக ராகுல் மற்றும் நெல்சன் ஆகியோர் என் கணவரிடம் பேசினர்.

ரூ.8 லட்சம்

அப்போது பரிசு தொகையை பெற வேண்டும் என்றால் குறிப்பிட்ட அளவுக்கு பணம் செலுத்த வேண்டும் என்று கூறினார்கள். இதை நம்பி என் கணவர் பல தவணையாக ரூ.8 லட்சத்து 10 ஆயிரத்து 600-ஐ வங்கி மூலமாக அனுப்பி வைத்தார்.

ஆனால் 2 பேரும் கூறியதுபோல பரிசு தொகையை கொடுக்கவில்லை. அதன் பிறகுதான் என் கணவரை 2 பேரும் சேர்ந்து மோசடி செய்தது தெரியவந்தது. எனவே ராகுல் மற்றும் நெல்சன் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தரவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

2 பேர் மீது வழக்கு

இந்த மனு மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவுக்கு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டார். அதன்பேரில் 2 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story