2 மாதங்களுக்கு பிறகு நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் எழும்பூர் வரை இயக்கம் - பயணிகள் மகிழ்ச்சி


2 மாதங்களுக்கு பிறகு நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் எழும்பூர் வரை இயக்கம் - பயணிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 4 Dec 2019 10:00 PM GMT (Updated: 4 Dec 2019 2:45 PM GMT)

2 மாதங்களுக்கு பிறகு நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் எழும்பூர் வரை இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

நெல்லை, 

தென் மாவட்டங்களில் இருந்து நெல்லை எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்கள் சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் வரை இயக்கப்பட்டு வந்தது.

எழும்பூர் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடந்ததால் கடந்த அக்டோபர் மாதம் 10–ந் தேதி முதல் நெல்லையில் இருந்து சென்னை செல்லக்கூடிய நெல்லை எக்ஸ்பிரஸ், செங்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் சென்னை தாம்பரம் ரெயில் நிலையம் வரை இயக்கப்பட்டது. இதனால் அந்த ரெயிலில் தென் மாவட்டங்களில் இருந்து செல்லும் பயணிகள் தாம்பரத்தில் இறங்கி, அங்கு இருந்து எழும்பூருக்கு பஸ்சில் பயணம் செய்தனர். இதனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு செல்லமுடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.

இந்த பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) வரை நடைபெற இருந்தது. ஆனால் இந்த பணி முன்கூட்டியே முடிவடைந்ததால் சென்னை எழும்பூருக்கு நெல்லை எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டன.

நேற்று முன்தினம் இரவு 7.40 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை சென்றடைந்தது. கடந்த அக்டோபர் 10–ந் தேதி முதல் தாம்பரம் வரை சென்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று எழும்பூர் ரெயில் நிலையம் வரை சென்றது.

அதில் பயணம் செய்த நெல்லை பயணிகள் கூறுகையில், எழும்பூரில் பராமரிப்பு பணிகள் நடந்ததால் கடந்த 2 மாதங்களாக நாங்கள் தாம்பரத்தில் இறங்கி எழும்பூருக்கு பஸ் பிடித்து சென்றோம். இதனால் நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம். தற்போது பராமரிப்பு பணி முன்கூட்டியே முடிவடைந்து உள்ளது. இதனால் எழும்பூர் வரை நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றதால் மகிழ்ச்சியில் உள்ளோம் என்றனர். இதுபோல் செங்கோட்டையில் இருந்து நேற்று முன்தினம் மாலையில் புறப்பட்ட பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலையில் எழும்பூர் ரெயில் நிலையம் சென்றடைந்தது. இதனால் அதில் பயணம் செய்த பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Next Story