செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் குபேர ஹோமம் திரளான பக்தர்கள் தரிசனம்


செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் குபேர ஹோமம் திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 5 Dec 2019 10:30 PM GMT (Updated: 5 Dec 2019 4:06 PM GMT)

செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் நடந்த குபேர ஹோமத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பாடாலூர்,

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் 12 ராசிகள் 27 நட்சத்திரங் களுக்குமான குபேரன் மீன ஆசனத்தில் வீற்றிருக்குமாறு ஏகாம்பரேஸ்வரர் கல் தூண்களின் சிற்பங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. காமாட்சி அம்மன் சன்னதிக்கு எதிரில் மகா குபேரனுக்கு தனி சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் மகா குபேரன் சித்ரலேகாவுடன் தாமரை மலர்மேல் அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார். இந்த சன்னதியில் ஒவ்வொரு மாதமும் குபேரனின் ஜென்ம நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தன்று மகா குபேர ஹோமம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நேற்று பூரட்டாதி நட்சத்திரத்தை ஒட்டி மகா குபேரனுக்கு சிறப்பு ஹோமமும், சிறப்பு வழிபாடும் வெகு விமரிசையாக நடந்தது.

திரளான பக்தர்கள்

ஹோமம், அபிஷேகம், பூஜைகளை கோவில் அர்ச்சகர்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர். இதில் பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், திருச்சி, துறையூர், மண்ணச்சநல்லூர், ஈரோடு, சென்னை, கரூர், சேலம், தஞ்சை மற்றும் பல்வேறு நகரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, மகாகுபேரனுக்கு பச்சை வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்து, தங்களது பிரார்த்தனையை நிறைவேற்றி தரிசனம் செய்தனர். மகா குபேர ஹோமத்தை தொடர்ந்து பக்தர்களுக்கு பச்சை குங்குமம் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

Next Story