பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, கோவையில் வாகன சோதனை தீவிரம் - பலத்த போலீஸ் பாதுகாப்பு


பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, கோவையில் வாகன சோதனை தீவிரம் - பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 6 Dec 2019 4:00 AM IST (Updated: 5 Dec 2019 9:43 PM IST)
t-max-icont-min-icon

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கோவையில் வாகன சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

கோவை,

இன்று(வெள்ளிக்கிழமை) பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகர பகுதிகளில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தமிழக கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தலைமையில் போலீசார் கோவையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், பஸ்நிலையங்கள், கோவில்கள், மசூதிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை போலீசார் தீவிர சோதனை செய்த பின்னரே நகருக்குள் அனுமதிக்கின்றனர். மாநகர் முழுவதும் 24 மணிநேரமும் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கமாண்டோ படையினரும், அதிரடிப்படையினரும் கோவையில் முகாமிட்டு உள்ளனர். கோவை புறநகர் பகுதிகளிலும் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கோவை ரெயில் நிலையத்தில் 100-க்கும் மேலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரெயில் நிலையத்துக்கு வரும் சரக்குகள் போலீசார் தீவிர சோதனை செய்த பின்னரே ரெயில் நிலையத்துக்குள் அனுமதிக்கின்றனர்.

ரெயில்களிலும், ரெயில் நிலையங்களிலும், தண்டவாள பகுதிகளிலும் போலீசார் ரோந்து சென்று வருகிறார்கள். கோவை விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story