உசிலம்பட்டி பகுதி பாசனத்திற்காக, வைகை அணையில் இருந்து 58-ம் கால்வாயில் தண்ணீர் திறப்பு
உசிலம்பட்டி பகுதி பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து 58-ம் கால்வாயில் வினாடிக்கு 100 கனஅடி வீதம் தண்ணீர் நேற்று திறக்கப்பட்டது.
ஆண்டிப்பட்டி,
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்டங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதில் மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து வைகை அணையில் இருந்து கால்வாய் மூலம் உசிலம்பட்டி பகுதியில் உள்ள கிராமங்கள், திண்டுக்கல் மாவட்டம் விருவீடு உள்ளிட்ட 58 கிராமங்கள் பாசன வசதி பெறும் வகையில் தண்ணீர் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்காக வைகை அணையில் இருந்து ரூ.86 கோடி செலவில் சுமார் 27 கிலோமீட்டர் தூரத்திற்கு கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது. இது 58-ம் கால்வாய் என்று அழைக்கப்படுகிறது.
இந்த கால்வாய் அமைக்கும் பணி முடிவடைந்து, கடந்த ஆண்டு அதில் சோதனை அடிப்படையில் வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பின்னர் வைகை அணையில் நீர்மட்டம் குறைந்ததால் கால்வாயில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.
வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால், அணையில் இருந்து 58-ம் கால்வாயில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று உசிலம்பட்டி சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். மேலும் உண்ணாவிரதம், வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
ஆனால் வைகை அணை நீர்மட்டம் 67 அடியை கடந்தால் மட்டுமே தண்ணீர் திறக்கும் வகையில் 58-ம் கால்வாய் திட்டம் அமைக்கப்பட்டுள்ளதால், தண்ணீர் திறக்க முடியாத நிலை இருந்தது. இந்நிலையில் வைகை அணை நீர்மட்டம் தற்போது 68 அடியை எட்டியுள்ளதை தொடர்ந்து, உசிலம்பட்டி பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று 58-ம் கால்வாயில் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
இதனையடுத்து நேற்று காலை 6 மணி முதல் வைகை அணையில் இருந்து 58-ம் கால்வாயில் வினாடிக்கு 100 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. 58-ம் கால்வாயில் அதிகபட்சமாக வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் திறக்க முடியும். ஆனால் கடந்த ஆண்டு அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டபோது கால்வாயில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. இதன்காரணமாக தற்போது குறைந்த அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தண்ணீர் செல்வதை உறுதி செய்த பின்னர், திறக்கப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வைகை அணையில் இருந்து 58-ம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் உசிலம்பட்டி சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story