போலீஸ் வேலையில் சேர போலி விளையாட்டு சான்றிதழ்: ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மேலும் 3 வாலிபர்கள் கைது


போலீஸ் வேலையில் சேர போலி விளையாட்டு சான்றிதழ்: ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மேலும் 3 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 5 Dec 2019 10:30 PM GMT (Updated: 5 Dec 2019 6:44 PM GMT)

போலீஸ் வேலையில் சேர போலி விளையாட்டு சான்றிதழ் கொடுத்த விவகாரத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மேலும் 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மோசடி குறித்த திடுக்கிடும் தகவல்களும் தெரியவந்துள்ளன.

ராமநாதபுரம்,

விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டில் போலீஸ் வேலையிலும், பிற அரசு வேலையிலும் சேர போலியாக சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த கபடி பயிற்சியாளர் சீமான் மற்றும் அவரின் ஏஜென்டான ராமநாதபுரம் மாவட்டம் ஓ.கரிசல்குளம் ராஜீவ்காந்தியும், இவர்களிடம் சான்றிதழ் பெற்று பணியில் சேர்ந்த திருச்சி ஆயுதப்படை போலீஸ்காரர் மணிராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மேலும் பலருக்கு இதுபோன்று போலியாக விளையாட்டு சான்றிதழ்களை கொடுத்துள்ளதும், அவர்களில் சிலர் அரசு வேலைக்கு தேர்வாகி இருப்பதும் தெரியவந்துள்ளது.

குறிப்பாக நடந்து முடிந்துள்ள தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய 2-ம் நிலை காவலர் தேர்வில் கலந்து கொண்டு தேர்வாகி வேலைக்காக காத்திருப்பவர்களில் 5 பேருக்கு மேல் இந்த சான்றிதழ் சமர்ப்பித்தவர்கள் என்ற திடுக்கிடும் தகவலும் அம்பலமானது.

எனவே இதுதொடர்பாக அமைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீசார் தீவிர விசாரண மேற்கொண்டு மேலும் 3 பேரை கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் கூறியதாவது:-

இந்த மோசடி சம்பவத்தில் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தனிப்படையினர் போலீஸ் காவலர் பணிக்கு தேர்வாகி வேலைக்காக காத்திருக்கும் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா கே.வேப்பங்குளம் மேற்குத்தெரு முத்துப்பாண்டி மகன் முத்துமணி(வயது23), முதுகுளத்தூர் தாலுகா சுடலைஊருணி பாதை பகுதியை சேர்ந்த மோகன்தாஸ் என்பவரின் மகன் பி.ஏ. பட்டதாரியான ராஜசேகரன்(25) ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் ஏஜெண்டு ராஜீவ்காந்தி மூலம் தலா ரூ.30 ஆயிரம் கொடுத்து சீமானிடம் போலி விளையாட்டு சான்றிதழ் வாங்கி சமர்ப்பித்து, காவலர் பணிக்கு தேர்வாகி பணி ஆணைக்காக காத்திருக்கின்றனர்.

மேலும், இந்திய-திபெத் எல்லை காவல் படை பிரிவில் சேருவதற்காக காத்திருந்த கடலாடி தாலுகா மாரந்தை அருகே உள்ள ஏ.புனவாசல் பகுதியை சேர்ந்த ஆண்டி மகன் தவமுருகன்(22) என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ரூ.17 ஆயிரம் கொடுத்து தேசிய கபடி போட்டியில் பங்கேற்றதாக சான்றிதழ் பெற்று உடல்தகுதி தேர்வில் தகுதி பெற்று வேலைக்காக காத்திருக்கிறார். எனவே இந்த சான்றிதழ் மோசடி சம்பவத்தில் மேலும் பலர் சிக்க வாய்ப்பு உள்ளது. இதற்காக தனிப்படையினர் பல பகுதிகளுக்கு விரைந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் இந்த மோசடி தொடர்பாக போலீசார் கூறுகையில், “கிராமங்களில் கபடி விளையாடி வேலைக்காக காத்திருக்கும் கிராமப்புற இளைஞர்களை குறிவைத்துதான் சீமான், ஏஜென்டு ராஜீவ்காந்தி ஆகியோர் காய்களை நகர்த்தி உள்ளனர். அதிலும் சீமான் கபடி பயிற்சியாளராக இருந்து கொண்டு, போலீஸ் சீருடை அணிந்து தன்னை ஒரு இன்ஸ்பெக்டர் போன்றே வெளிக்காட்டி வந்துள்ளார். இன்ஸ்பெக்டராக பணியாற்றி காவல்துறை சார்பில் கபடி போட்டிகளுக்கு வீரர்களை தேசிய போட்டிகளுக்கு அழைத்து சென்று வருவதாகவும் இளைஞர்களை நம்ப வைத்துள்ளார்” என்று தெரிவித்தனர்.

அதே நேரத்தில் அவர், படங்களில் நடித்து வருவதாகவும் சமீபத்தில் கூட பிரபல படத்தில் கபடி பயிற்சியாளராக நடித்துள்ளதாகவும், சினிமா காட்சிகளுக்காக இதுபோன்ற உடை அணிந்து படம் எடுத்ததாக போலீசாரிடம் விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

Next Story