மழையால் விளைச்சல் பாதிப்பு: சேலம் பூ மார்க்கெட்டில் குண்டுமல்லி விலை உயர்வு கிலோ ரூ.1,500-க்கு விற்பனை


மழையால் விளைச்சல் பாதிப்பு: சேலம் பூ மார்க்கெட்டில் குண்டுமல்லி விலை உயர்வு கிலோ ரூ.1,500-க்கு விற்பனை
x
தினத்தந்தி 6 Dec 2019 4:00 AM IST (Updated: 6 Dec 2019 1:14 AM IST)
t-max-icont-min-icon

சேலம் பூ மார்க்கெட்டில் குண்டுமல்லிவிலை உயர்ந்தது. ஒரு கிலோ ரூ.1,500-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சேலம், 

சேலம், நாமக்கல், தர்மபுரி, கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டங்களில் பரவலாக குண்டுமல்லி, சன்ன மல்லி, சம்பங்கி, சாமந்தி, அரளி உள்பட பல வகையான பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டுக்கும், கோவை, சென்னை, பெங்களூருவில் உள்ள பூ மார்க்கெட்டுகளுக்கும் பூக்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பூக்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக குண்டுமல்லி, சாமந்தி பூக்களின் விளைச்சல் அதிகளவு குறைந்துள்ளது. ஆனால், சபரிமலை சீசன் காரணமாகவும், முகூர்த்தநாள் என்பதாலும் சாமந்தி, குண்டுமல்லி பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.நேற்று சேலம் பூ மார்க்கெட்டில்ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.1,500-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து சேலம் வ.உ.சி.பூ மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், சேலம் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் குண்டுமல்லி, சாமந்தி உள்ளிட்ட சில பூக்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆந்திர மாநிலம் கடப்பாவில் இருந்து சாமந்தி பூக்கள் இங்கு விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இதன் காரணமாக கடந்த மாதத்தை காட்டிலும் தற்போது பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

அதாவது, கடந்த மாதம் ரூ.1,000 முதல் ரூ.1,200-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ குண்டுமல்லிரூ.1,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், ஒரு கிலோ சாமந்தி ரூ.150-ம், அரளி ரூ.200, சன்னமல்லி ரூ.700, ஜாதிமல்லி ரூ.300, கனகாம்பரம் ரூ.500, சம்பங்கி ரூ.60, கோழிக்கொண்டை ரூ.100, பன்னீர்ரோஸ் ரூ.140-க்கும் விற்பனை செய்யப்படுகிறது, என்றனர்.

Next Story