மணல் கடத்திய 4 பேர் கைது ஊராட்சி மன்ற முன்னாள் தலைவி உள்பட 3 பேர் மீது வழக்கு


மணல் கடத்திய 4 பேர் கைது ஊராட்சி மன்ற முன்னாள் தலைவி உள்பட 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 6 Dec 2019 4:30 AM IST (Updated: 6 Dec 2019 1:23 AM IST)
t-max-icont-min-icon

கல்லக்குடி அருகே மணல் கடத்தியதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், இதுதொடர்பாக ஊராட்சி மன்ற முன்னாள் தலைவி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

கல்லக்குடி,

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம், தாப்பாய் கிராமத்தில் இருந்து மணல் கடத்தப்படுவதாக லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் இரவு இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், கல்லக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் தாப்பாய் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு டிராக்டரில் 4 பேர் மணலுடன் மாரியம்மன் கோவில்தெரு பகுதிக்கு சென்று கொண்டு இருந்தனர். அந்த டிராக்டரை போலீசார் நிறுத்தி விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் தாப்பாய் கிராமத்தை சேர்ந்த மூர்த்திராஜா (வயது 25), பாடாலூர் ஊத்தங்கால் கிராமத்தை சேர்ந்த மாரியப்பன்(31), சரவணன் (25), கோவிந்தராஜ் (23) என்பதும், கும்பகோணத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் இருந்து திருட்டுத்தனமாக லாரியில் கடத்தி வரப்பட்ட மணலை டிராக்டரில் ஏற்றி வந்ததும் தெரிய வந்தது.

4 பேர் கைது

அதன்பேரில், அந்த லாரியையும், அதில் இருந்தவர்களையும் மடக்கி பிடிக்க போலீசார் விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். பின்னர், அந்த லாரியையும், டிராக்டரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதைத்தொடர்ந்து பிடிபட்ட மூர்த்திராஜா உள்பட 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்களை லால்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி லால்குடி கிளை சிறையில் அடைத்தனர்.

மேலும், இதுதொடர்பாக டிராக்டரின் உரிமையாளர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவி செல்வி, லாரி டிரைவர் கன்னியாகுமரி மாவட்டம் சூரியகோடு கிராமத்தை சேர்ந்த சுந்தர்ராஜ் மற்றும் மணல் புரோக்கர் திருச்சி மாவட்டம் நம்புகுறிச்சி கிராமத்தை சேர்ந்த ரஞ்சித் ஆகியோர் மீது வழக்கு பதிந்து அவர்களை தேடி வருகின்றனர்.


Next Story