சுருளி அருவி கோவில் பூசாரி கொலை வழக்கில், பள்ளி மாணவன் உள்பட 2 பேர் கைது


சுருளி அருவி கோவில் பூசாரி கொலை வழக்கில், பள்ளி மாணவன் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 6 Dec 2019 3:30 AM IST (Updated: 6 Dec 2019 1:28 AM IST)
t-max-icont-min-icon

சுருளி அருவி பகுதியில் உள்ள கோவில் பூசாரி கொலை வழக்கில் பள்ளி மாணவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

உத்தமபாளையம்,

தேனி மாவட்டம் கம்பத்தை அடுத்த சுருளி அருவியில் பூதநாராயணன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக மலையான் (வயது 65) இருந்து வந்தார். கடந்த மே மாதம் 4-ந்தேதி இரவு கோவிலில் மலையான் மற்றும் சாமியார் பாலசுப்பிரமணி (58) ஆகியோர் தங்கி இருந்தனர். அப்போது கோவில் உண்டியல் பூட்டை உடைத்து பணத்தை திருடுவதற்கு கோவிலுக்கு புகுந்த மர்மநபர்கள் தாக்கியதில் மலையான் சம்பவ இடத்தியே பலியானார். சாமியார் பாலசுப்பிரமணி படுகாயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பூசாரியை கொலை செய்த மர்மநபர்களை ராயப்பன்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாயன், கூடலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திவான்மைதீன் ஆகியோர் தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்த முருகன் என்பவரது மகன் தீனா (20) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது பூசாரி கொலை செய்தது அவர் தான் என்றும், அவருடன் சேர்ந்து 9-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவனுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பள்ளி மாணவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் போலீசாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், கோவிலில் உள்ள உண்டியலை உடைத்து பணத்தை திருடுவதற்கு தீனா மற்றும் பள்ளி மாணவன் கோவிலுக்குள் சென்றுள்ளனர். உண்டியலின் பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டு கோவில் பூசாரி எழுந்து வந்துள்ளார். அவரை அரிவாள் மற்றும் கம்பியால் தாக்கி அவர்கள் கொலை செய்துள்ளனர் என்றனர்.

Next Story