திருவண்ணாமலையில் மகா தீபத்தின் போது 2,500 பக்தர்கள் மட்டுமே மலை ஏற நிபந்தனைகளுடன் அனுமதி - கலெக்டர் அறிவிப்பு


திருவண்ணாமலையில் மகா தீபத்தின் போது 2,500 பக்தர்கள் மட்டுமே மலை ஏற நிபந்தனைகளுடன் அனுமதி - கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 6 Dec 2019 4:30 AM IST (Updated: 6 Dec 2019 1:28 AM IST)
t-max-icont-min-icon

மகா தீபத்தின்போது 2,500 பக்தர்கள் நிபந்தனைகளுடன் மலை ஏற அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ். கந்தசாமி நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதன் சிகர நிகழ்ச்சியாக வருகிற 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கோவில் பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. மகா தீபத்தின்போது மலை மீது ஏறுவதற்கு நிபந்தனைகளுடன் 2 ஆயிரத்து 500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மலை ஏற வரும் பக்தர்களுக்கு அன்று காலை 6 மணி முதல் திருவண்ணாமலை செங்கம்-சாலையில் உள்ள சண்முகா தொழிற்சாலை அரசு பள்ளி வளாகத்தில் சிறப்பு கவுண்ட்டர் திறக்கப்பட்டு அனுமதி சீட்டு வழங்கப்படும். அனுமதி சீட்டு பெற்றவர்கள் காலை 6 மணி முதல் மலை ஏற அனுமதிக்கப்படுவர்.

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வரிசை எண்ணுடன் அனுமதி சீட்டு வழங்கப்படும். அனுமதி சீட்டு பெற வரும் பக்தர்கள் தங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை மற்றும் பிற இதர அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலினை சமர்ப்பிக்க வேண்டும்.

மலை ஏறும் பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட ‘பே’ கோபுரம் அருகில் உள்ள வழியில் மட்டுமே மலை ஏற வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட கால நேரத்திற்குள் மலையில் ஏறி இறங்க வேண்டும். மற்ற வழிகளில் மலை ஏற அனுமதி வழங்கப்படமாட்டாது. மலை ஏறும் பக்தர்கள் தண்ணீர் பாட்டில் மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர்.

மேலும் காலி தண்ணீர் பாட்டில்களை மலையில் இருந்து இறங்கி வரும் போது திரும்ப கொண்டுவர வேண்டும். மலை ஏறும் பக்தர்கள் கற்பூரம், பட்டாசு மற்றும் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.

பக்தர்கள் கொண்டு செல்லும் நெய்யினை அனுமதிக்கப்பட்ட கொப்பரையில் மட்டுமே ஊற்ற வேண்டும். வேறு எந்த இடத்திலும் நெய்யினை ஊற்றவோ, நெய் தீபம் ஏற்றவோ கூடாது. இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு அண்ணாமலையார் மலை ஏறும் பக்தர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்படும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகராட்சி பகுதிகள் மற்றும் 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள கிரிவலப்பாதையில் இறைச்சி விற்பனை கடைகளை நாளை (சனிக்கிழமை) முதல் 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை 4 நாட்கள் மூட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story