கிளங்காட்டூர் கண்மாய் வரத்துக்கால்வாயில் உள்ள அடைப்பை அகற்ற வலியுறுத்தல்
மானாமதுரை அருகே கிளங்காட்டூர் கண்மாய் வரத்துக்கால்வாயில் உள்ள அடைப்பை அகற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மானாமதுரை,
வைகை ஆற்றில் வரும் தண்ணீரானது ராஜகம்பீரத்தில் இருந்து தீத்தான்பேட்டை வழியாக கிளங்காட்டூர் உள்ளிட்ட கிராம கண்மாய்களுக்கு செல்ல கால்வாய் உள்ளது. ராஜகம்பீரம் புதூர் கண்மாயை அடுத்து தீத்தான்பேட்டை முகப்பில் இருந்து பிரிந்து கிளங்காட்டூர் மற்றும் அன்னவாசல் ஆகிய இரு கிராமங்களுக்கும் தனித்தனி கால்வாய்கள் செல்கிறது. ராஜகம்பீரம் புதூர் கண்மாய் நிரம்பி கிளங்காட்டூர் கண்மாய்க்கு வரும் வரத்துக்கால்வாயை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தூர்வாரி வருகின்றனர். ஆனால் கிளங்காட்டூர் கால்வாய்க்கு தண்ணீர் செல்லும் கால்வாய் அடைக்கப்பட்ட நிலையில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து கிளங்காட்டூர் விவசாயிகள் கூறியதாவது:-
கிளங்காட்டூர் கண்மாய் பாசனத்தை நம்பி 232 ஏக்கர் நிலங்கள் உள்ளன. கிளங்காட்டூர் கண்மாய்க்கு ஆண்டுதோறும் தண்ணீர் திறக்க வேண்டும் என பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பரிந்துரை செய்தும், இதுவரை திறக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம், கால்வாய் அடைப்பை அகற்றி கண்மாய்க்கு தண்ணீர் வர வழிவகை செய்ய வேண்டும்.
தற்போது பொதுப்பணித்துறையினர் வரத்துக்கால்வாயை தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அடைப்பை அகற்றாமல் கால்வாயை தூர்வாரி எந்த பயனும் இல்லை. மேலும் கண்மாய் அடைப்பு சம்பந்தமாக கிளங்காட்டூர் கிராம மக்கள் சார்பில் கலெக்டர், வருவாய்த்துறை அதிகாரிகள், பொதுப்பணி துறை அதிகாரிகள் ஆகியோரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளன. ஆனால் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.
கண்மாயில் தண்ணீர் தேங்காததால் சுற்றுவட்டார கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. எனவே உடனடியாக கால்வாய் அடைப்பை சரிசெய்து வைகை தண்ணீரை கிளங்காட்டூர் கால்வாய் வழியாக கண்மாய்க்கு கொண்டு சென்றால் விவசாயம் செய்ய ஏதுவாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், கால்வாய் எதற்காக அடைக்கப்பட்டது என்பது தெரியவில்லை. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
Related Tags :
Next Story