சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு குறும்படம் எடுப்பவர்களுக்கு விருது - கலெக்டர் தகவல்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து சிறந்த விழிப்புணர்வு குறும்படம் எடுப்பவர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேனி,
தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை சார்பில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து சிறந்த குறும்படம் எடுத்து சமர்ப்பிக்கும் நபர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது. அதன்படி, தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து நிலம், காற்று, நீர், வனம், தொழிற்சாலை நடவடிக்கைகள், தாவரங்கள், விலங்குகள் உள்ளிட்ட ஏதாவது ஒரு தலைப்பில் பொது ஊடகங்களில் விளம்பரப்படுத்த ஏதுவாக தக்க, தரமான விழிப்புணர்வு குறும்படங்களை சுற்றுச்சூழல் துறைக்கு வருகிற 20-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
விளம்பர பட தயாரிப்பு நிறுவனங்கள், திரைப்பட இயக்குனர்கள், திரைப்பட பயிற்சி மையம் மற்றும் திரைப்பட துறையில் அனுபவம் உள்ள தனி நபர்களும் இதில் பங்கேற்கலாம். சிறந்த 3 படங்கள் தேர்வு செய்யப்பட்டு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. முதல் பரிசு ரூ.7 லட்சம், 2-வது பரிசு ரூ.6 லட்சம், 3-வது பரிசு ரூ.5 லட்சம் வழங்கப்படும்.
விளம்பர விழிப்புணர்வு குறும்படங்கள் மாநிலத்தின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை பிரதிபலிக்கும் விதமாக இருக்க வேண்டும். தமிழ் மொழியில் மட்டுமே தயாரிக்க வேண்டும். 2 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். சமர்ப்பிக்கப்படும் படம் இதற்கு முன்பு வேறு எந்த போட்டியிலும் பங்கேற்றதாக இருக்கக்கூடாது. புதிதாக தயாரிக்கப்பட்டு இருக்க வேண்டும்.
ஒருவர் எத்தனை குறும்படங்களையும் தயார் செய்து அனுப்பலாம். படத்தின் கதை மற்றும் கதையம்சம் அரசின் எந்தவொரு திட்டங்களையும் கேலி செய்யும் விதமாக இருக்கக்கூடாது.
தேர்வு செய்யப்பட்ட குறும்படங்களின் நகல்கள், ஊடகங்கள், சுற்றுச்சூழல் துறை அலுவலக இணையதளம், ஏனைய அரசு சார்ந்த இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும். பள்ளிகளில் நடக்கும் தேசிய பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்ற நிகழ்ச்சிகளிலும் திரையிடப்படும்.
மேலும் விவரங்களை www.environment.tn.nic.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story