உள்ளாட்சி தேர்தல் நடக்கக்கூடாது என தி.மு.க. நினைக்கிறது - ஜி.கே.வாசன் பேட்டி


உள்ளாட்சி தேர்தல் நடக்கக்கூடாது என தி.மு.க. நினைக்கிறது - ஜி.கே.வாசன் பேட்டி
x
தினத்தந்தி 7 Dec 2019 4:30 AM IST (Updated: 7 Dec 2019 1:06 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தல் நடக்கக்கூடாது என தி.மு.க. நினைக்கிறது என ஜி.கே.வாசன் கூறினார். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் திருவையாறில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தஞ்சாவூர், 

பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து சிறுபான்மை இஸ்லாமிய சமுதாயத்தின் ஒரு பிரிவினர் மறுஆய்வு மனு சமர்ப்பிக்க விரும்புகிறார்கள் என்ற செய்தி பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருக்கிறது. சட்டம் அவர்களுக்கு வழங்கியுள்ள உரிமையாக இருந்தாலும், இன்றைய சூழ்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எல்லோரும் ஏற்றுக்கொண்டு இருக்கின்றனர்.

காரணம,் இந்திய தேசத்தின் ஒற்றுமை, இந்திய இறையாண்மை மீதுள்ள நம்பிக்கை, எல்லோரும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற ஆர்வம். சமூக நல்லிணக்கம் என்று நான் குறிப்பிட விரும்புகிறேன். ஒவ்வொருவருக்கும் விட்டுகொடுக்கும் மனப்பாங்கு இருக்க வேண்டும். இவை தான் இந்தியாவை பாதுகாத்து வருகிறது. அத்தகைய இந்தியா பண்பாட்டு, கலாசாரத்தை கடைபிடிக்க வேண்டும். தேசத்தின் நலனை காக்க வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலை நடத்த ஆளும் அ.தி.மு.க. நினைத்தது. உள்ளாட்சி தேர்தலை நடக்கக்கூடாது என எதிர்க்கட்சியான தி.மு.க. நினைக்கிறது. உச்சநீதிமன்றத்தில் நடந்த வாதத்தின் மூலம் உண்மை நிலை வெளிவந்து இருக்கிறது.

உள்ளாட்சி தேர்தல் முறையாக நடக்க வேண்டும் என்பதற்காக தான் மாநில தேர்தல் ஆணையம் நேற்று உச்சநீதிமன்றத்தில் தங்களது வாதத்தை சரியாக வைத்து இருக்கிறது.

உள்ளாட்சி தேர்தல் நடக்கக் கூடாது என்ற ரீதியில் எதிர்க்கட்சியை சேர்ந்த வக்கீல்கள் தங்களது வாதங்கள் மூலம் தெரிவித்து இருக்கின்றனர். மக்களது எண்ணங்களுக்கு ஏற்றவாறு உள்ளாட்சியில் நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற ரீதியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற வேண்டும் என்பது தான் அ.தி.மு.க. கூட்டணியின் விருப்பம்.

பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கும், பாலியல் சம்பந்தமாக ஈடுபடுபவர்களுக்கும் உச்சகட்ட தண்டனை கொடுக்க வேண்டும் என்பதில் இந்தியாவில் யாருக்கும் மாற்று கருத்து கிடையாது. சிறுமிகள் கூட அதில் இருந்து தப்புவது கிடையாது. எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பதுதான் த.மா.கா.வின் கோரிக்கையாகும்.

இதுபோன்ற தவறான ஒழுக்கமற்ற செயலில் ஈடுபடுபவர்களை உடனடியாக அடையாளம் கண்டு கொண்டு விசாரணைக்கு அதிக நேரத்தை காலத்தை தாழ்த்தாமல் தண்டனையை உடனே வழங்க வேண்டிய நிலையை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும்.

தெலுங்கானாவில் இதுபோன்ற தவறான செயலில் ஈடுபட்ட 4 பேர் சுட்டு கொல்லப்பட்டு இருக்கிறார்கள். ஏன்? எதற்காக அவர்கள் கொல்லப்பட்டார்கள்?. அவர்கள் ஏற்கனவே ஒழுக்கமற்ற செயலில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்ற உண்மை நிலை இருக்கும்போது இதில் விசாரணை நிச்சயம் தேவை என்பதில் மாற்று கருத்து கிடையாது.

அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கக்கூடிய பலவகையை கையாளக்கூடியவர்களாக இருக்க முடியும் என நான் சந்தேகப்படுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story