ரூ.8 லட்சம் கடனை திருப்பி கேட்டதால் நகைக்கடை உரிமையாளரை கொன்று விபத்தில் இறந்ததாக நாடகம் - ஜவுளிக்கடை உரிமையாளர் உள்பட 2 பேர் கைது
திருமருகல் அருகே நகைக்கடை உரிமையாளர் மர்ம சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ரூ.8 லட்சம் கடனை திருப்பி கேட்டதால் அவரை கழுத்தை நெரித்துக்கொன்று விபத்தில் இறந்ததாக நாடகம் ஆடியது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடர்பாக ஜவுளிக்கடை உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருமருகல்,
நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள திருப்புகலூர் மெயின் சாலையில் கொய்யாத்தோப்பு என்ற இடத்தில் கடந்த 2-ந் தேதி இரவு மோட்டார் சைக்கிளுடன் வாலிபர் ஒருவர் காயங்களுடன் பிணமாக கிடப்பதாக திட்டச்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பிணமாக கிடந்த வாலிபர், மயிலாடுதுறை ஓ.எஸ்.எம். நகரை சேர்ந்த ரிக்கப் சந்த் மகன் ஜித்தேந்திர குமார்(வயது 34) என்பதும், இவர் திருமருகல் சந்தைப்பேட்டையில் நகைக்கடை மற்றும் அடகு கடை வைத்திருப்பதும் தெரிய வந்தது.
இதனைத்தொடர்ந்து ஜித்தேந்திர குமாரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜித்தேந்திர குமாரின் சாவில் மர்மம் இருப்பதாக அவருடைய உறவினர் அஜித்குமார் என்பவர் திட்டச்சேரி போலீசில் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வரத்தினம் உத்தரவின் பேரில் உதவி போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மங்களநாதன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு ஜித்தேந்திரகுமார் கொலை செய்யப்பட்டாரா? அல்லது மோட்டார் சைக்கிளில் வந்தபோது விபத்தில் உயிரிழந்தாரா? என விசாரணை நடத்தினர்.
மேலும் திருமருகல் கடைத்தெரு பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக திருமருகல் மதகடி தெருவைச்சேர்ந்த கார்த்திகேயன் மகன் தினேஷ்குமார்(29) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தினேஷ்குமார், தனது நண்பர் குருவாடி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கார் டிரைவரான சங்கர் மகன் தீபக்(23) என்பவருடன் சேர்ந்து ஜித்தேந்திரகுமாரின் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
கொலை செய்யப்பட்ட ஜித்தேந்திரகுமாரிடம் தினேஷ்குமார் ரூ.8 லட்சம் கடன் வாங்கி உள்ளார். இந்த பணத்தை கொடுக்காமல் காலம் கடத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் சென்ற ஜித்தேந்திரகுமார், தினேஷ்குமாரை சந்தித்து தான் கொடுத்த பணத்தை கேட்டுள்ளார். அதற்கு பணம் தருவதாக கூறி அவரை தினேஷ்குமாரும், தீபக்கும் காரில் அழைத்து சென்றுள்ளனர். அப்போது காரில் வைத்து இருவரும் ஜித்தேந்திரகுமாரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் அவரது உடலை காரின் டிக்கியில் வைத்து திருப்புகலூர் கொய்யாத்தோப்பு என்ற இடத்துக்கு கொண்டு வந்துள்ளனர். அங்கு சாலையோரத்தில் ஜித்தேந்திரகுமார் உடலையும், அவரது மோட்டார் சைக்கிளையும் போட்டுவிட்டு விபத்தில் உயிரிழந்தது போல் நாடகமாடி உள்ளனர்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
இதையடுத்து தினேஷ்குமார், தீபக் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்ததுடன் கொலைக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட நகைக்கடை உரிமையாளரை கொலை செய்து விபத்தில் இறந்தது போல் நாடகமாடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story