சேலத்தில் துப்பாக்கி முனையில் வாலிபரை போலீசார் அழைத்து சென்றதால் பரபரப்பு


சேலத்தில் துப்பாக்கி முனையில் வாலிபரை போலீசார் அழைத்து சென்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 7 Dec 2019 11:15 PM GMT (Updated: 7 Dec 2019 8:46 PM GMT)

சேலம் முள்ளுவாடி கேட் அருகே துப்பாக்கி முனையில் வாலிபர் ஒருவரை கர்நாடக போலீசார் அழைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்,

சேலம் சுந்தர் லாட்ஜ் பஸ்நிறுத்தம் அருகே உள்ள காபி பாரில் நேற்று இரவு 8.30 மணியளவில் 2 வாலிபர்கள் நின்று கொண்டு இருந்தனர். அப்போது 2 காரில் டிப்-டாப் உடையணிந்த 4 பேர் வந்தனர். அவர்கள் அந்த வாலிபர்கள் அருகே சென்று, அவர்களில் ஒருவரை தங்களுடன் வருமாறு அழைத்தனர்.

அதற்கு அந்த வாலிபர் மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து 4 பேர்களில் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை காட்டி தன்னுடன் வருமாறு எச்சரிக்கை விடுத்தார்.

இதைப்பார்த்து அந்த வாலிபர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதன்பின் அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் அந்த வாலிபர்களில் ஒருவரை காரில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து வேகமாக சென்றனர். ்இதனால் அங்கு பரபரப்பு தொற்றி கொண்டது.

காரை பிடிக்க உத்தரவு

இந்த சம்பவம் குறித்து அவருடன் வந்த மற்றொரு வாலிபர் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த போலீசார் ஒருவரிடம் தெரிவித்தார்.

இந்த தகவலை அவர் சேலம் மாநகர போலீஸ் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்தார். அவர்கள் வாக்கி டாக்கி மூலம் நகரில் உள்ள ரோந்து போலீசாருக்கு அந்த காரை பிடிக்குமாறு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் மாநகர போலீசார் காரை துரத்தி பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

போலீசார் விசாரணை

இதைத்தொடர்ந்து கருப்பூர் பகுதியில் வைத்து அந்த காரை கருப்பூர் போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் போலீசார் நீங்கள் ஏன்? வாலிபரை கடத்தி செல்கிறீர்கள் என கேட்டனர். அதற்கு அவர்கள் நாங்கள் கர்நாடக எலக்ட்ரிக்சிட்டி போலீசார் எனவும், ரூ.25 லட்சம் மதிப்பிலான குட்கா கடத்தல் விவகாரம் தொடர்பாக, செவ்வாய்பேட்டை லாங்லி ரோடு பகுதியை சேர்ந்த ஹரிஸ் தேவராஜூ (வயது 28) என்பவரை துப்பாக்கி முனையில் அழைத்து செல்வதாகவும் கூறினர்.

இதைக்கேட்ட போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்துவதற்காக அந்த வாலிபரை கருப்பூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவர்களுடன் கர்நாடக போலீசாரும் உடன் சென்றனர்.

அங்கு வைத்து ஹரிஸ் தேவராஜூவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே அந்த வாலிபருடன் வந்த நபர் காபி பார் அருகே நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த அஸ்தம்பட்டி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் செவ்வாய்பேட்டையை சேர்ந்த தோளாராம் (23) என்பதும், துப்பாக்கி முனையில் அழைத்து செல்லப்பட்ட வாலிபரின் உறவினர் எனவும் கூறினார். இதன்பின்பு அவரை அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

பரபரப்பு

இதுகுறித்து போலீசார் கூறுகையில், கர்நாடக மாநிலம் எலக்ட்ரிக்சிட்டி போலீசார் ரூ.25 லட்சம் கடத்தல் குட்கா தொடர்பாக கடந்த மாதம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வழக்கு தொடர்பாக தற்போது அவர்கள் 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கடத்தல் குட்காவை ஹரிஸ் தேவராஜூ வாங்கியுள்ளார்.

இதையடுத்து அவரை கைது செய்வதற்காக நேற்று முன்தினம் இருந்தே கர்நாடக போலீசார் சேலம் வந்து அவரை கண்காணித்து வந்துள்ளனர்.இந்தநிலையில் நேற்று அவரை துப்பாக்கி முனையில் விசாரணைக்காக அழைத்து சென்றனர் என்றார்கள்.

அதே நேரத்தில் வாலிபரை மர்ம ஆசாமிகள் துப்பாக்கி முனையில் கடத்தி செல்லப்பட்டதாக தகவல் பரவியதால் சேலத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story