வெண்ணந்தூரில் குறுகிய சாலையால் போக்குவரத்து பாதிப்பு சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை


வெண்ணந்தூரில் குறுகிய சாலையால் போக்குவரத்து பாதிப்பு சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 7 Dec 2019 10:45 PM GMT (Updated: 7 Dec 2019 8:55 PM GMT)

வெண்ணந்தூரில் குறுகிய சாலையால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

வெண்ணந்தூர்,

வெண்ணந்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் விசைத்தறி, கைத்தறி மற்றும் விவசாயம் பிரதான தொழிலாக நடைபெற்று வருகிறது. மேலும் ஆங்காங்கே சிறு தொழிற்சாலைகளும் நடைபெற்று வருகிறது.

பேரூராட்சி பகுதிகளில் உள்ள மாணவ, மாணவிகள் தினமும் சைக்கிள், இருசக்கர வாகனம் மற்றும் பஸ்களில் ஆங்காங்கே வெளியூர்களுக்கு சென்று பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் அண்ணா சிலை பகுதியில் இருந்து காமராஜர் சிலை வரை உள்ள சாலை குறுகிய சாலையாக உள்ளதால் காலை மற்றும் மாலை நேரங்களில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் உள்ள சாலையாக உள்ளது. இதனால் இந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பஸ்கள் செல்ல முடியாத நிலையில் காலதாமதம் ஏற்படுகிறது. இந்த சாலைகளின் இரு புறங்களிலும் கடைகள் அதிகம் இருப்பதால் அங்கு செல்லும் பொதுமக்கள் ஆங்காங்கே இரு சக்கர வாகனங்களை நிறுத்திவிடுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பிக்கும் நிலை உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

சரி செய்ய கோரிக்கை

இதனால் காலை நேரங்களில் பள்ளி, கல்லூரி பஸ்கள் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் மாணவ, மாணவிகள் வகுப்புகளுக்கு காலதாமதமாக செல்கின்றனர். மேலும் மாலை நேரங்களில் வீடு திரும்பும் போதும் அதே நிலை ஏற்பட்டு வீடுகளுக்கு செல்ல காலதாமதம் ஏற்படுகிறது.

இது சம்பந்தமாக போக்குவரத்து துறையினர் கவனத்தில் கொண்டு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி சரி செய்து, சீரான போக்குவரத்து ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் அல்லது அந்த சாலையை ஒரு வழிப்பாதையாக அறிவித்து போக்கு வரத்தை கட்டுப்படுத்தலாம் என்று பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.


Next Story