சத்தியமங்கலத்தில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு; பொதுமக்கள் தர்ணா போராட்டம்


சத்தியமங்கலத்தில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு; பொதுமக்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 7 Dec 2019 10:45 PM GMT (Updated: 7 Dec 2019 9:05 PM GMT)

சத்தியமங்கலத்தில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.

சத்தியமங்கலம், 

சத்தியமங்கலம் காந்திநகரில் அரசு போக்குவரத்து கழக பணிமனை மதில் சுவரையொட்டி தனியாருக்கு சொந்தமான இடம் உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க கட்டிட பணி நடந்து வருகிறது.

அதேபோல் நேற்று பணி நடந்து கொண்டிருந்தது. இதுபற்றி அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் நேற்று மதியம் 12 மணி அளவில் அங்கு திரண்டனர்.

பின்னர் டாஸ்மாக் கடை கட்டிடம் முன்பு உட்கார்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.

இதுபற்றி அறிந்ததும் சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா, போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

அதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் கூறும்போது, ‘புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கப்படும் இந்த இடம் குடியிருப்பு பகுதியாகும். இந்த வழியாக பெண்கள், குழந்தைகள் அடிக்கடி செல்வார்கள்.

அப்போது குடிமகன்களால் தொல்லை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இங்கு டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அதிகாரிகளிடம் மனு கொடுத்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டோம்’ என்றனர்.

அதற்கு போலீசார் கூறும்போது, ‘இதுசம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு 1.30 மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து டாஸ்மாக் கட்டிட பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

பொதுமக்களின் திடீர் போராட்டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story