சூட்கேசில் துண்டு துண்டாக உடல் மீட்கப்பட்ட வழக்கில் திருப்பம் தந்தையை கொன்ற வளர்ப்பு மகள் கைது காதலனுடன் சேர்ந்து தீர்த்து கட்டினார்


சூட்கேசில் துண்டு துண்டாக உடல் மீட்கப்பட்ட வழக்கில் திருப்பம் தந்தையை கொன்ற வளர்ப்பு மகள் கைது காதலனுடன் சேர்ந்து தீர்த்து கட்டினார்
x
தினத்தந்தி 8 Dec 2019 12:00 AM GMT (Updated: 2019-12-08T02:50:19+05:30)

மாகிம் கடலில் சூட்கேசில் துண்டு துண்டாக உடல் மீட்கப்பட்ட வழக்கில் தந்தையை கொலை செய்த வளர்ப்பு மகள் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

மாகிம் கடலில் சூட்கேசில் துண்டு துண்டாக உடல் மீட்கப்பட்ட வழக்கில் தந்தையை கொலை செய்த வளர்ப்பு மகள் கைது செய்யப்பட்டார். பாலியல் தொல்லை கொடுத்ததால் அப்பெண் தனது 16 வயது காதலனுடன் சேர்ந்து தீர்த்து கட்டியது தெரியவந்தது.

சூட்கேசில் உடல்

மும்பை மாகிம் கடலில் கடந்த சில நாட்களுக்கு முன் மர்ம சூட்கேஸ் ஒன்று மிதந்துகொண்டிருந்தது. இதுபற்றி அறிந்த போலீசார் அந்த சூட்கேசை மீட்டு திறந்து பார்த்தபோது, அதில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில், ஒரு ஆணின் கால்கள், மார்பு பகுதி மற்றும் மர்ம உறுப்பு உள்ளிட்ட பாகங்கள் இருந்தன.

மேலும் அந்த சூட்கேசில் 2 சட்டைகள், ஒரு கம்பளி ஆடை மற்றும் பேன்ட் இருந்தது. அவற்றை கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளியை பிடிக்க விசாரணை நடத்தினர்.

சட்டையால் துப்பு துலங்கியது

இதில், சூட்கேசில் இருந்த ஒரு சட்டையில், தையல் கடையின் பெயர் மற்றும் முகவரி இருந்தது. இதையடுத்து போலீசார் குா்லா மேற்கு, பெல்காமி ரோட்டில் இருந்த அந்த தையல் கடைக்கு சென்று விசாரி்த்தனர். அப்போது அந்த சட்டையின் சொந்தகாரரின் பெயர் பென்னட் என்ற தகவல் மட்டும் போலீசாருக்கு கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அந்த சட்டை மற்றும் பென்னட் என்ற பெயரை மட்டும் வைத்து கொலை செய்யப்பட்டவரை சமூக வலைதளம் மற்றும் தையல் கடை அமைந்துள்ள பகுதியில் தேடினர். இதில் முகநூல் மூலமாக போலீசார் பென்னட் ரெய்பெல்லோ என்ற பெயரில் ஒருவர் சாந்தாகுருஸ் கிழக்கு பகுதியில் வசித்ததை கண்டுபிடித்தனர்.

வளர்ப்பு மகள் கொன்றார்

இதையடுத்து போலீசார் அங்கு சென்றபோது, பென்னட் ரெய்பெல்லோவின் வீடு பூட்டி கிடந்தது. அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தபோது, பென்னட் ரெய்பெல்லோ (வயது59), வளர்ப்பு மகளான ஆராதியா என்ற ரியாவுடன் (19) வசித்து வருவதாக கூறினர்.

இதையடுத்து போலீசார் ரியாவை பிடித்து விசாரணை நடத்தினர். முதலில் அவர் வளர்ப்பு தந்தை கனடாவில் இருப்பதாக கூறினார். பின்னர் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், அவர்தான் 16 வயது காதலனுடன் சேர்ந்து வளர்ப்பு தந்தையை கொலை செய்தது தெரியவந்தது.

பாலியல் தொல்லையால் விரக்தி

இதையடுத்து நடந்த விசாரணையில், பென்னட் ரெய்பெல்லோ வளர்ப்பு மகள் ரியாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதனால் விரக்தி அடைந்த அவர் கடந்த மாதம் 26-ந் தேதி தனது காதலனுடன் சேர்ந்து தந்தையை கட்டையால் அடித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்தார். பின்னர் என்ன செய்வது என்று தெரியாமல், தந்தையின் உடலை 3 நாட்களாக வீட்டிலேயே வைத்து இருக்கிறார்.

இதன் பின்னர் அவர் தனது காதலனுடன் சேர்ந்து தந்தையின் உடலை துண்டு துண்டாக வெட்டி உள்ளார். பின்னர் அதை ஒரு சூட்கேசில் போட்டு வக்கோலா பகுதியில் உள்ள மித்தி நதியில் வீசினார். அந்த சூட்கேஸ் மாகிம் கடற்கரையில் ஒதுங்கிய போது அது போலீசார் கைப்பற்றப்பட்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலீசார் ரியா மற்றும் அவரது காதலனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாலியல் தொல்லை கொடுத்த வளர்ப்பு தந்தையை காதலனுடன் சேர்ந்து இளம்பெண் கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி வீசிய சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story