வேலூர், ராணிப்பேட்டையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் இன்று நடைபெறும் - கலெக்டர்கள் தகவல்


வேலூர், ராணிப்பேட்டையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் இன்று நடைபெறும் - கலெக்டர்கள் தகவல்
x
தினத்தந்தி 8 Dec 2019 10:45 PM GMT (Updated: 8 Dec 2019 2:30 PM GMT)

உள்ளாட்சி தேர்தல் ரத்து காரணமாக வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெறும் என்று கலெக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

வேலூர், 

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள காயிதே மில்லத் கூட்டரங்கில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

கடந்த 2–ந் தேதி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தபோது உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் உடனடியாக குறைதீர்வு நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதேபோன்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல் முறையாக நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டமும் ரத்தானது.

இந்த நிலையில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையறை, சுழற்சிமுறை இடஒதுக்கீடு பணிகளை முடித்த பின்னரே உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்டு தீர்ப்பு வழங்கியது.

அதன்படி புதிதாக உருவாக்கிய வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் வருகிற 27, 30 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

எனவே வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் தேர்தல் நடைபெறாததால் நடத்தை விதிகள் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து வேலூர், ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் வழக்கம்போல் இன்று நடைபெறும்.

மேலும் அரசு விழாக்கள், அம்மா திட்ட முகாம், மனுநீதி நாள் முகாம், விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் ஆகியவை வழக்கம்போல் நடைபெறும் என்று வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர்கள் சண்முகசுந்தரம், திவ்யதர்ஷினி ஆகியோர் தெரிவித்தனர்.

Next Story