திருவண்ணாமலையில் புதுமாப்பிள்ளை கொலை வழக்கில் 3 பேர் கைது - ஒருதலை காதல் வெறியால் நடந்த கொடூரம்


திருவண்ணாமலையில் புதுமாப்பிள்ளை கொலை வழக்கில் 3 பேர் கைது - ஒருதலை காதல் வெறியால் நடந்த கொடூரம்
x
தினத்தந்தி 9 Dec 2019 4:30 AM IST (Updated: 8 Dec 2019 8:56 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் புதுமாப்பிள்ளை கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை தாலுகா அரடாப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் உதயசூரியன் (வயது 30). இவர் வேலூர் ரோட்டில் மருந்து கடை நடத்தி வந்தார். இவரது மனைவி ரேவதி. இவர் வேட்டவலம் சாலையில் பெட்டி கடை நடத்தி வந்தார்.

இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த 1–ந் தேதி திருக்கோவிலூர் ரோடு எடப்பாளையம் ஏரிக்கரையில் உதயசூரியன் துணியால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தாமரை நகரை சேர்ந்த ராஜீவ்காந்தி (32), சமுத்திர காலனியை சேர்ந்த கல்லூரி மாணவர் சஞ்சய் (22), ஏழுமலை (29), சந்தோஷ் (20) ஆகியோர் இந்த கொலையை செய்தது தெரியவந்தது. இதில் சஞ்சய், ஏழுமலை ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் கலசபாக்கம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ராஜீவ்காந்தி சரண் அடைந்தார். அவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:–

ரேவதியை ராஜீவ்காந்தி ஒருதலை பட்சமாக காதலித்து வந்துள்ளார். ஆனால் ரேவதி உதயசூரியனை 10 ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறி ராஜீவ்காந்தியின் காதலை ஏற்க மறுத்துள்ளார். தொடர்ந்து ரேவதி உதயசூரியனை திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜீவ்காந்தி உதயசூரியனை கொலை செய்ய திட்டியுள்ளார்.

பின்னர் அவர் அவரது நண்பர்களுடன் சேர்ந்து உதயசூரியனிடம் பழகி வந்து உள்ளார். சம்பத்தன்று இரவு ராஜீவ்காந்தி உதயசூரியனை தொடர்பு கொண்டு எடப்பாளையம் ஏரி அருகே வரவழைத்தார். அப்போது ஒரு காரில் ராஜீவ்காந்தி, சஞ்சய், ஏழுமலை, சந்தோஷ் ஆகியோர் எடப்பாளையம் வந்தனர். காரின் முன் சீட்டில் உதயசூரியனை ஏறும் படி அழைத்து உள்ளனர். பின்னால் இருந்த 3 பேரும் துணியால் உதயசூரியன் கழுத்தை நெரித்து கொலை செய்து 200 மீட்டர் தூரம் சென்று ரோட்டில் போட்டு விட்டு சென்றது தெரியவந்தது.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சந்தோசை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story