திருச்சி அருகே ரெயில்வே கேட்டை நீண்ட நேரம் மூடி வைப்பதால் அவதி: வைகை எக்ஸ்பிரசை மறித்து பொதுமக்கள் போராட்டம்


திருச்சி அருகே ரெயில்வே கேட்டை நீண்ட நேரம் மூடி வைப்பதால் அவதி: வைகை எக்ஸ்பிரசை மறித்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 8 Dec 2019 11:00 PM GMT (Updated: 8 Dec 2019 3:31 PM GMT)

திருச்சி அருகே ரெயில்வே கேட்டை நீண்ட நேரம் மூடி வைப்பதால் அவதி ஏற்படுவதாக கூறி வைகை எக்ஸ்பிரசை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி,

திருச்சி அருகே பூங்குடிக்கும், இனாம்குளத்தூருக்கும் இடையே சன்னாசிப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆள் உள்ள ரெயில்வே கேட் ஒன்று உள்ளது. திருச்சி-மதுரை மார்க்க ரெயில்கள் இந்த வழியாக கடந்து செல்லும் போது கேட் மூடப்படுவது வழக்கம். இவ்வாறு மூடப்படும் கேட்டுகள் ரெயில்கள் கடந்து சென்ற பின் திறக்கப்படும்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சன்னாசிப்பட்டி ரெயில்வே கேட்டை ரெயில் வருவதற்கு முன் அரை மணிநேரத்திற்கு முன்னதாக ஊழியர்கள் பூட்டி வந்துள்ளனர். நீண்ட நேரம் மூடி வைப்பதால் பொதுமக்கள் வாகனங்களில் அந்த வழியாக கடந்து செல்ல கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

வைகை எக்ஸ்பிரஸ்

இதற்கிடையில் நேற்று காலை 7 மணி அளவில் ரெயில்வே கேட்டை இருபுறமும் ரெயில்வே ஊழியர்கள் பூட்டினர். ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் கேட் திறக்கப்படாததால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து வரிசையாக நின்றன. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். நீண்ட நேரம் கேட் மூடி வைக்கப்பட்டிருந்ததால் பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர். மதுரையில் இருந்து சென்னை நோக்கி வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 8.40 மணி அளவில் அந்த இடத்தின் அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது பொதுமக்கள் தண்டவாளத்தில் நின்று மறியலில் ஈடுபட்டனர். இதனை கண்ட என்ஜின் டிரைவர் ரெயிலின் வேகத்தை குறைத்தார். இதற்கிடையில் அந்த இடத்தில் சிவப்பு நிற கொடியை ஊழியர்கள் தண்டவாளத்தில் கட்டி வைத்தனர். இதனால் அசாதாரண சூழ்நிலை நிலவுவதை கண்ட என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தினார். இதையடுத்து ரெயில் முன்பு பொதுமக்கள் நின்று கொண்டு மறியலில் ஈடுபட்டனர். இதில் அந்த பகுதி மற்றும் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

போலீசார் பேச்சுவார்த்தை

கேட் நீண்ட நேரம் மூடி வைக்கப்படுவதால் பொதுமக்கள் இரு புறமும் கடந்து செல்ல தாமதம் ஏற்படுகிறது. எனவே, ரெயில் வரும் நேரம் மட்டுமே பூட்டி வைத்து திறக்க வேண்டும், முன் அறிவிப்பு இல்லாமல் பூட்டி வைக்க கூடாது என கோரி மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த திருச்சி ஜங்‌‌ஷன் ரெயில்வே போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி, ஏட்டு ராஜேஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மறியலை கைவிடும்படியும், ரெயில்வே அதிகாரிகளிடம் இது குறித்து தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினர். தொடர்ந்து இனாம் குளத்தூர் ரெயில் நிலைய அதிகாரிகளும் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதைதொடர்ந்து காலை 9.45 மணி அளவில் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது.

பயணிகள் கடும் அவதி

இதைத்தொடர்ந்து ரெயில்வே கேட் திறக்கப்பட்டபின் வாகனங்கள் கடந்து சென்றன. அப்போது, ரெயில்வே கேட் மூடப்பட்டு திறக்கப்படுவதில் இதே நிலை தொடர்ந்தால் ரெயில் மறியல் போராட்டம் மீண்டும் நடைபெறும் என பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தினால் திருச்சி ஜங்‌‌ஷன் ரெயில் நிலையத்திற்கு நேற்று காலை 9.15 மணி அளவில் வர வேண்டிய வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதமாக காலை 10.35 மணி அளவில் வந்தது. பின்னர் காலை 10.40 மணி அளவில் அந்த ரெயில் சென்னை புறப்பட்டு சென்றது. ரெயில் தாமதத்தால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

Next Story