2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் 2021-ம் ஆண்டுக்குள் நிறைவுபெறும் முதல்-மந்திரி எடியூரப்பா தகவல்


2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் 2021-ம் ஆண்டுக்குள் நிறைவுபெறும் முதல்-மந்திரி எடியூரப்பா தகவல்
x
தினத்தந்தி 8 Dec 2019 10:30 PM GMT (Updated: 8 Dec 2019 5:24 PM GMT)

பெங்களூருவில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் 2021-ம் ஆண்டுக்குள் நிறைவு செய்யப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

பெங்களூரு, 

பெங்களூருவில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் 2021-ம் ஆண்டுக்குள் நிறைவு செய்யப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

அதிகாரிகளுக்கு உத்தரவு

பெங்களூரு மாநகராட்சி சார்பில் எலகங்காவில் அம்பேத்கர் பவன் கட்டிடம் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா மற்றும் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா எலகங்காவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு, திட்ட பணிகளை தொடங்கி வைத்து பேசியதாவது:-

வரும் நாட்களில் பெங்களூருவை பெரிய அளவில் மேம்படுத்த திட்டமிட்டுள்ளேன். குப்பை கழிவுகள் பிரச்சினைக்கு விஞ்ஞான பூர்வமாக தீர்வு காண வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். நகரில் தனியார் வாகனங்களின் எண்ணிக்கையை குறிப்பிடத்தக்க அளவில் குறைத்து, காற்று மாசுவை கட்டுப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தர விட்டுள்ளேன்.

மெட்ரோ ரெயில் வசதிகள்

நகரில் பஸ், சைக்கிள்களுக்கு தனித்தனி பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் வருகிற 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன். வெளிவட்டச்சாலை, சர்வதேச விமான நிலையத்திற்கு மெட்ரோ ரெயில் வசதிகள் வருகிற 2023-ம் ஆண்டுக்குள் ஏற்படுத்தப்படும்.

3-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் ஒசக்கோட்டை கிராஸ் வரை மெட்ரோ ரெயில் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. சர்வதேச விமான நிலையத்தில் கெம்பேகவுடா சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

கோவிந்த் கார்ஜோள்

இந்த விழாவில் துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள், மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை மந்திரி சதானந்தகவுடா, போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, மேயர் கவுதம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story