ஐதராபாத் பாணியில் என்கவுண்ட்டரில் சுட்டு கொன்று விடுவேன் ரவுடிகள், திருடர்களை ஆபாசமாக திட்டி போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
கொள்ளேகாலில், ஐதராபாத் பாணியில் என்கவுண்ட்டரில் சுட்டு கொன்று விடுவேன் என்று ரவுடிகளையும், திருடர்களையும் ஆபாசமாக திட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த் குமார் எச்சரிக்கை விடுத்தார்.
கொள்ளேகால்,
கொள்ளேகாலில், ஐதராபாத் பாணியில் என்கவுண்ட்டரில் சுட்டு கொன்று விடுவேன் என்று ரவுடிகளையும், திருடர்களையும் ஆபாசமாக திட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த் குமார் எச்சரிக்கை விடுத்தார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு
சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் டவுன் பகுதியில் கடந்த சில நாட்களாக குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக திருட்டு, வழிப்பறி, தங்கச்சங்கிலி பறிப்பு சம்பவங்கள் போன்றவை அடிக்கடி நடந்து வருகிறது. இதையடுத்து குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த் குமார் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் மோட்டார் சைக்கிள் திருடர்கள் 3 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 9 மோட்டார் சைக்கிள்களை மீட்டனர். இந்த நிலையில் நேற்று கொள்ளேகால் போலீஸ் நிலையத்தில் ரவுடிகளின் அணிவகுப்பு மற்றும் மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஆபாசமாக திட்டினார்
இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கொள்ளேகால் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அவர் மோட்டார் சைக்கிள் திருடர்களையும், ரவுடிகளையும் அழைத்து எச்சரித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நீங்கள் உங்கள் அப்பா, அம்மாவுக்கு கெட்ட பெயரை மட்டும்தான் வாங்கித் தருகிறீர்கள். மோட்டார் சைக்கிள்களை திருடுகிறீர்கள். பொதுமக்களுக்கு இடையூறு செய்கிறீர்கள். உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா?. உங்கள் அனைவரையும் ஐதராபாத் பாணியில் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றுவிடுவேன். இனிமேல் ஒழுங்காக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். இந்த சந்தர்ப்பத்தில் ரவுடிகளையும், திருடர்களையும் ஆபாச வார்த்தைகளால் கடுமையாக திட்டினார்.
சமூக வலைத்தளங்களில் வைரல்
பின்னர் அவர் ரவுடிகளை மீண்டும் கடுமையாக எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தார். அதையடுத்து அவர் மோட்டார் சைக்கிள்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
இதற்கிடையே ரவுடிகளையும், திருடர்களையும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த் குமார் கடுமையாக எச்சரிக்கும் வீடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அது பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story