திருவண்ணாமலை மாவட்டத்தில் 860 கிராம ஊராட்சி பகுதிகளில் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் - கலெக்டர் தகவல்


திருவண்ணாமலை மாவட்டத்தில் 860 கிராம ஊராட்சி பகுதிகளில் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 8 Dec 2019 11:00 PM GMT (Updated: 2019-12-09T00:17:00+05:30)

திருவண்ணாமலை மாவட்டத்தில் 860 கிராம ஊராட்சி பகுதிகளில் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது என்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை,

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 860 கிராம ஊராட்சி பகுதிகளில் 3,520 வாக்குச்சாவடி மையங்களில் வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 34 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 341 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 860 கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும் மற்றும் 6,207 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணியுடன் முடிவடையும். வாக்கு எண்ணிக்கை வருகிற ஜனவரி 2-ந் தேதி காலை 8 மணிக்கு 18 மையங்களில் நடைபெறும்.

முதல் கட்டமான 27-ந் தேதி திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், துரிஞ்சாபுரம், தண்டராம்பட்டு, செய்யாறு, அனக்காவூர், வெம்பாக்கம், தெள்ளார், பெரணமல்லூர் ஆகிய ஒன்றியங்களுக்கு 1,930 வாக்குசாவடி மையங்களிலும், 2-ம் கட்டமான 30-ந் தேதி போளூர், கலசபாக்கம், சேத்துப்பட்டு, செங்கம், புதுப்பாளையம், ஜவ்வாதுமலை, வந்தவாசி, ஆரணி, மேற்கு ஆரணி ஆகிய ஒன்றியங்களுக்கு 1,590 வாக்குசாவடி மையங்களிலும் தேர்தல் நடக்கிறது.

27-ந் தேதி 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 181 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 498 கிராம ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கும் மற்றும் 3,480 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் வாக்குப்பதிவு நடக்கிறது.

30-ந் தேதி 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 160 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 362 கிராம ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கும் மற்றும் 2,727 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் வாக்குப்பதிவு நடக்கிறது.

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு வெள்ளை நிறத்திலும், கிராம ஊராட்சித் தலைவர்கள் தேர்தலுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு பச்சை நிறத்திலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படும்.

2 கிராம ஊராட்சி வார்டுகளுக்கு பொதுவாக அமைக்கப்படும் வாக்குச் சாவடிகளில் ஒரு வார்டிற்கு வெள்ளை நிறத்திலும், மற்றொரு வார்டிற்கு இளநீல நிறத்திலும் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படும்.

இந்த தேர்தலில் 8 லட்சத்து 5 ஆயிரத்து 233 ஆண் வாக்காளர்களும், 8 லட்சத்து 21 ஆயிரத்து 899 பெண் வாக்காளர்களும், 78 மூன்றாம் பாலின வாக்காளர்களும் ஆக மொத்தம் 16 லட்சத்து 27 ஆயிரத்து 210 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

முதற்கட்டத்தில் 4 லட்சத்து 27 ஆயிரத்து 379 ஆண் வாக்காளர்களும், 4 லட்சத்து 37 ஆயிரத்த 826 பெண் வாக்காளர்களும், 54 மூன்றாம் பாலின வாக்காளர்களும் ஆக மொத்தம் 8 லட்சத்து 65 ஆயிரத்து 259 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

2-ம் கட்டத்தில் 3 லட்சத்து 77 ஆயிரத்து 854 ஆண் வாக்காளர்களும், 3 லட்சத்து 84 ஆயிரத்து 73 பெண் வாக்காளர்களும், 24 மூன்றாம் பாலின வாக்காளர்களும் ஆக மொத்தம் 7 லட்சத்து 61 ஆயிரத்து 951 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

ஊராட்சி தேர்தலுக்காக 40 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 1,105 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஒரு கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் வாக்குச்சாவடிகளுக்கு 7 அலுவலர்கள் வீதமும், 2 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் வாக்குச்சாவடிகளுக்கு 8 அலுவலர்கள் வீதமும் சுமார் 29 ஆயிரம் அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story