ஹெல்மெட் அணியாமல் வந்த காதல் ஜோடிகளுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவுரை


ஹெல்மெட் அணியாமல் வந்த காதல் ஜோடிகளுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவுரை
x
தினத்தந்தி 8 Dec 2019 11:00 PM GMT (Updated: 2019-12-09T00:20:56+05:30)

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் நோக்கி ஹெல்மெட் அணியாமல் வந்த காதல் ஜோடிகளுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவுரை கூறி அனுப்பினார்.

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்திற்கு பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் வருகைக்கு பிறகு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. நேற்று காலை 10 மணி முதல் மாமல்லபுரம் பல்லவன் சிலை அருகில் சென்னையில் இருந்து இ.சி.ஆர். சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் மாமல்லபுரம் நோக்கி ஒவ்வொரு காதல் ஜோடியாக வந்து கொண்டிருந்தனர். மாமல்லபுரம் போலீசார் ஒவ்வொரு காதல் ஜோடியையும், நண்பர்களுடன் வந்த வாலிபர்களையும் மடக்கி அங்குள்ள மர நிழலில் நிற்க வைத்தனர். பல காதல் ஜோடிகளும், வாலிபர்களும் ஹெல்மெட் அணியாமல் வந்திருந்தனர்.

அங்கு 100-க்கும் மேற்பட்ட காதல் ஜோடிகள் ஒரே நேரத்தில் போலீசாரிடம் பிடிபட்டதால் அவர்கள் பயந்தனர்.

பின்னர் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் அவர்களை கும்பலாக நிற்கவைத்து பேசுகையில், நீங்கள் யாரும் பயப்பட தேவையில்லை. ஒரு விழிப்புணர்வுக்காகத்தான் உங்களை இங்கு நிற்க வைத்துள்ளோம். நீங்கள் உங்கள் பெற்றோர்களின் கனவை சிதைக்கும் வகையில், உங்கள் உயிர்களை பற்றி கவலைப்படாமல் ஹெல்மெட் அணியாமல் பயணம் மேற்கொள்கிறீர்கள். ஹெல்மெட் அணிந்துதான் இரு சக்கர வாகனத்தில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறி அனுப்பினார்.

போலீசாரின் அறிவுரையை ஏற்ற காதல் ஜோடியினரும், நண்பர்களுடன் சுற்றுலா வந்த வாலிபர்களும் இனி நாங்கள் ஹெல்மெட் அணிந்து பயணம் மேற்கொள்வதாக அங்கேயே உறுதிமொழி ஏற்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

Next Story